சியாட்டில் - திருடப்பட்ட விமானம் நொறுங்கியது

சியாட்டில் திருடப்பட்ட விமானம் நொறுங்கியது

அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலம், சியாட்டிலில் உள்ள டாகோமா விமான நிலையத்தில் விமானத்தை திருடிச் சென்றவர், விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

ஹாரிசான் என்ற விமான நிறுவனத்தில் தரை உதவி மையத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்தவர் ரிச்சர்ட் ரஸ்ஸல் (வயது 29). விமானம் மேலே எழும்ப வழிகாட்டுதல், சுமைகளை ஏற்றி இறக்குதல் போன்ற பணிகளை செய்து வந்தார்.

கடந்த வெள்ளியன்று சியாட்டில் உள்ளூர் நேரம் இரவு 7:32 மணிக்கு பராமரிப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தை இயக்க ஆரம்பித்தார். 76 இருக்கைகள் கொண்ட பாம்பரைடர் க்யூ400 வகை விமானம் இது.

விமானத்தை இயக்கிய ரிச்சர்ட்டை தொடர்பு கொண்ட தரை கட்டுப்பாட்டு அலுவலர்கள், பத்திரமாக விமானத்தை தரையிறக்கும்படி அவருக்கு வழிகாட்ட ஆலோசனைகள் வழங்க முயற்சித்தனர்.

இரவு 8:47 மணிக்கு விமானத்துடனான தொடர்பு அறுந்தது. விமான நிலையத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் கேட்ரான் தீவில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. ரிச்சர்ட்டை தவிர வேறு உயிரிழப்பு இருந்ததாக தெரியவில்லை.

தரை கட்டுபாட்டு அலுவலர்களுடன் நடந்த உரையாடலில் இருந்து ரிச்சர்ட் ரஸ்ஸலுக்கு யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லையென்பது தெரிய வந்துள்ளது. "எனக்கு ஏதோ கொஞ்சம் மனநல பாதிப்பு ஏற்பட்டு விட்டது" என்று அவர் கூறியுள்ளார்.

“விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் செல்வதற்கு ரிச்சர்ட் ரஸ்ஸல் அனுமதி பெற்றிருந்தார். பல பின்னணி சோதனைகளுக்குப் பிறகே அவர் இதற்கு அனுமதிக்கப்பட்டார். எந்தக் குற்றப்பின்னணியும் அவருக்கு இல்லை" என்று ஹாரிசான் விமான நிறுவனத்தின் தலைமை நிறுவனமான அலாஸ்கா ஏர் குரூப் தலைமை செயல் அதிகாரி பிராட் டில்டன் தெரிவித்துள்ளார்.

ரிச்சர்ட்டின் செயலில் தீவிரவாத நோக்கம் இல்லையென்றாலும், அவரது இந்தச் செயல் விமான நிலைய பாதுகாப்பை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

You'r reading சியாட்டில் - திருடப்பட்ட விமானம் நொறுங்கியது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வானில் ஒளி மழை.. ஆகஸ்ட் 12 நள்ளிரவு காணலாம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்