ஆந்திராவில் 3 தலைநகர்.. புதிய சட்டமசோதா தாக்கல்..

ஆந்திராவில் 3 புதிய தலைநகர்களை அமைக்கவும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட அமராவதி தலைநகரத் திட்டத்தை ரத்து செய்யவும் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். தெலுங்குதேசம் கட்சி படுதோல்வியுற்றது. அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக, தலைநகர் மண்டல வளர்ச்சி ஆணையம்(சிஆர்டிஏ) ஏற்படுத்தப்பட்டு, மிகப் பிரம்மாண்டமாக சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜெகன் அரசு அந்த திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்தது. இதற்கு அமராவதி மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். தெலுங்கு தேசம் கட்சியும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. எனினும், ஜெகன் அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
இந்நிலையில், ஆந்திர சட்டசபையில் இன்று(ஜன.20) 2 புதிய சட்டமசோதாக்கள் செய்யப்பட்டன. அதன்படி, அமராவதியை தலைநகராக்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான சிஆர்டிஏ அமைப்பும் கலைக்கப்படுகிறது. மேலும், புதிதாக 3 தலைநகர்களை அமைக்கும் திட்டத்திற்கும் அனுமதியளிக்கப்பட்டது. இதன்படி, அமராவதியில் சட்டசபை மட்டும் இருக்கும். ராஜ்பவன், தலைமைச் செயலகம், அனைத்து துறை தலைமை அலுவலகங்கள் ஆகியவை விசாகப்பட்டினத்தில் இயங்கும். நீதிமன்றங்கள் அனைத்தும் கர்னூல் நகரில் இயங்கும். இந்த மூன்றுமே தலைநகர்களாக அமைக்கப்படும். மேலும், மண்டல திட்டம் மற்றும் மேம்பாட்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு வாரியத்திலும் சில மாவட்டங்கள் இடம் பெறும்.
இந்த மசோதாக்களை நிதியமைச்சர் பக்கனா ராஜேந்திரநாத் ரெட்டி தாக்கல் செய்தார். சட்டசபையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளதால் இந்த சட்டம் எளிதில் நிறைவேற்றப்படும்.

You'r reading ஆந்திராவில் 3 தலைநகர்.. புதிய சட்டமசோதா தாக்கல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மக்கள்தொகை பதிவேடு.. மாநில அரசுகளுக்கு மம்தா வேண்டுகோள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்