நந்தா, ரமணாவால் மீண்டும் மீண்டும் அவமானப்பட்டேன் - நடிகர் பார்த்திபன் சோகம்!

Parthiban explains why he is not participate in ilayaraja event

இளையராஜா 75 பாராட்டு விழாவின் இயக்குனராக நடிகர் பார்த்திபன் தான் நியமிக்கப்பட்டார். ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னர் அந்த பதவியை அவர் ராஜினாமா செய்தார். இது தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் தெரியாத நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பார்த்திபன் கூறுகையில், "நான் இளையராஜாவின் தீவிர வெறியன் என்பது விஷாலுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் இந்த நிகழ்ச்சியை நடத்தும் இயக்குநர் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து ஏ.ஆர். ரஹ்மானிடம் தான் முதன்முறையாக இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறினேன். நான் கூறியதை அடுத்து அவரும் சம்மதித்தார்.

இதற்காக ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி வைத்திருந்தேன். ஆனால் திடீர் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான சரவணன் எனக்கு போனில் ‘நடிகர் ரமணா ஸ்கிரிப்ட் தயார் செய்து எடுத்து வருவார். நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என்று கூறினார். இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதேபோல் தான் முதல் நாள் நிகழ்ச்சி காலை வரை தொகுப்பாளர் யார் என்பதை முடிவு செய்யவில்லை. நான் நந்தாவிடம் சொன்னபிறகு என்னையே தொகுப்பாளரை நியமிக்க சொன்னார். அவசரம் அவசரமாக நான் தொகுப்பாளர் ஒருவரை தேர்வு செய்தால் அவசரமாக ஏற்பாடு செய்தபிறகு நந்தா ‘வேண்டாம். நானே ஏற்பாடு செய்துவிட்டேன்’ என்று கூறினார்.

நந்தாவிடம் இதை முன்பே சொல்லி இருக்கலாமே என்று கேட்டும் சரியான பதில் இல்லை. எனவே அன்று இரவே நான் இந்த நிகழ்ச்சியின் இயக்குனராக இருக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டேன். விஷாலுக்காக களத்தில் இறங்கி பணிபுரிவது நந்தாவும், ரமணாவும் தான். விஷாலின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர்கள் தான் நடத்துகிறார்கள். விஷால் ஒரு வார்த்தை அவர்களிடம் ‘நிகழ்ச்சியை நீங்கள் நடத்துங்கள். கிரியேட்டிவ் வி‌ஷயங்களை பார்த்திபனிடம் விட்டு விடுங்கள்’ என்று கூறி இருக்கலாம். அப்படி கூறாமல் இருந்தது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒருமுறைக்கு பலமுறை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால் எது நடந்தாலும் இளையராஜாவையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் ரஹ்மானிடம் நான் இந்த நிகழ்ச்சியின் டைரக்டர் என்றுதான் சம்மதிக்க வைத்தேன். அதனால் தான் என் ராஜினாமா வி‌ஷயத்தை சொல்லாமல் ரஹ்மானை கலந்துகொள்ள வீட்டிற்கு சென்று வழி அனுப்பி வைத்தேன்" என்று வருத்தமாக கூறியுள்ளார். இது தமிழ் திரையுலகில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading நந்தா, ரமணாவால் மீண்டும் மீண்டும் அவமானப்பட்டேன் - நடிகர் பார்த்திபன் சோகம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரட்டை இலை வழக்கில் விரைவில் தீர்ப்பு? குக்கர் சின்னம் விவகாரத்திலும் முடிவெடுக்கிறது ஆணையம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்