நல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை

We do not have the freedom of speech to express our good opinions: Film director S.A. Chandra Sekar says

நாட்டில் நல்ல கருத்துகளை பேச சுதந்திரமில்லை என நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கடுமையாக சாடி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். புதிய கல்விக் கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து உள்ளது. பேருந்து வசதி இல்லாத கிராம மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு படிப்பை பாதியில் நிறுத்திவிடும் நிலைமை உருவாகும் என்று சூர்யா தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்த சூர்யா, கிராமப்புற கல்வி நிறுவனங்களில் வசதிகள் குறைவு, ஆசிரியர் பற்றாக்குறையும் இருக்கிறது. இதனால் கல்வித் தரம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக இல்லை. இதுபோன்ற குறைபாடுகளை களையாமல் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் அரசு கவனம் செலுத்துவதாகவும் சாடியிருந்தார்.

இதனால் புதிய கல்வி கொள்கையை எதிர்க்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சமூக அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார். சூர்யாவின் இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பெருமளவில் பாராட்டுகள் குவிந்தாலும், பாஜக மற்றும் அதன் ஆதரவு சிலர் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. ஆனாலும் சூர்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில், இன்று நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் வாக்களித்து விட்டு வந்த நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடம், தேசிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து குறித்து கேட்டதற்கு, சுதந்திர நாட்டில் இருக்கிறோம். ஆனால் நல்ல கருத்துகளை சுதந்திரமாக பேச முடியவில்லை.இது பலருக்கும் நடக்கிறது. தற்போது நடிகர் சூர்யாவிற்கும் நடந்துள்ளது என வேதனையுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். சூர்யாவின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading நல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கனமழையால் நிரம்பும் கர்நாடக அணைகள்; காவிரியில் 8,300 க.அடி நீர் திறப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்