லாக்டவுன் கொடுமை, மீன் வியாபாரம் தொடங்கிய டைரக்டர்

malayalam film director starts fish stall

கொரோனா லாக் டவுன் காரணமாக படத்தை வெளியிட முடியாததாலும், பட வாய்ப்புகள் இல்லாததாலும் மலையாள டைரக்டர் வினோத் மீன் வியாபாரம் தொடங்கியுள்ளார்.
கடந்த பல மாதங்களாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா பலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது. ஏராளமானோர் தொழில் இழந்து தவிக்கின்றனர். பல துறைகளைப் போலவே சினிமா துறையிலும் அவதிப்படுபவர்கள் ஏராளம் உள்ளனர். கேரளாவில் தொழில் இழந்த திரைத்துறையை சேர்ந்த பலர் மீன் வியாபாரம், கருவாடு வியாபாரம், லாட்டரி டிக்கெட் விற்பனை என கிடைத்த தொழிலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுமுக இயக்குனரான வினோத் என்பவர் தன்னுடைய முதல் படத்தை முடிக்க முடியாததால் வேறு வழியின்றி தனது ஊரிலேயே ஒரு மீன் கடையை தொடங்கி நடத்தி வருகிறார். கேரள மாநிலம் தொடுபுழா அருகே உள்ள காரிக்கோடு என்ற இடத்தை சேர்ந்த வினோத்துக்கு இளம் வயதிலேயே சினிமா டைரக்ட் செய்ய வேண்டும் என்ற ஆவல் உண்டு. கல்லூரி படிப்பை முடித்த பின்னர் ஒரு மலையாள டிவி சேனலில் நிருபரானார். ஆனாலும் சினிமா மோகம் அவரை விட்டு போகவில்லை.


இந்நிலையில் சமீபத்தில் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு பிரபல நடிகர் பிரதாப் போத்தனை நாயகனாக வைத்து காபிர் என்ற படத்தை இயக்கினார். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து மிக்சிங் பணிகளும் இறுத்திக்கட்டத்தை எட்டிவிட்டது. ஒரு சில நாட்கள் மட்டுமே பணிகள் இருந்தன. ஆனால் அதற்குள் லாக்டவுன் வந்து விட்டது. இதனால் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மிக்சிங் பணிகளை முடித்தால் ஓடிடியிலாவது ரிலீஸ் செய்யலாம், அதுவும் முடியவில்லை. இதனால் படம் அப்படியே நிற்கிறது.
வேறு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கையில் இருந்த பணமும் காலியாகி விட்டது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த போது சில மலையாள நடிகர்கள் மீன் வியாபாரம் செய்வது நினைவுக்கு வந்தது. அந்த தொழிலையே செய்ய வினோத்தும் தீர்மானித்தார். வீட்டுக்கு அருகிலேயே இப்போது டைரக்டர் வினோத் ஒரு மீன் கடையை தொடங்கி விட்டார். நல்ல பிரஷ்ஷான மீன் விற்பதால் கடைக்கு ஆட்கள் வரத்தொடங்கி விட்டனர் என்கிறார் வினோத்.
நிருபராக பணிபுரியும் போது அழுகிய மீன்களை விற்பது குறித்த செய்திகளை நான் கொடுத்துள்ளேன். இதனால் நல்ல மீன்களை விற்பனை செய்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் மீன் விற்பனையை தொடங்கி உள்ளேன் என்று நம்பிக்கையுடன் வினோத் கூறுகிறார். படப்பிடிப்பு தொடங்கும் வரை மீன் வியாபாரம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

You'r reading லாக்டவுன் கொடுமை, மீன் வியாபாரம் தொடங்கிய டைரக்டர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோவிட் நோயாளிகளுக்கு நிரந்தர நரம்பு பாதிப்பு: பிரிட்டிஷ் ஆய்விதழ் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்