ஆஸ்கார் பட்டியலில் இருந்து மலையாள படம் ஜல்லிக்கட்டு வெளியேற்றம்

ஆஸ்கார் விருது பட்டியலில் இருந்து மலையாளப் படமான ஜல்லிக்கட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.இவ்வருட ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி விருதுக்கான படங்கள் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெளிநாட்டு மொழிகளுக்கான பிரிவில் இந்தியாவிலிருந்து மலையாள படமான ஜல்லிக்கட்டு என்ற படம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து இந்தப் பிரிவில் இந்த ஒரே ஒரு படம் தான் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய இந்தப் படம் கடந்த 2019 ம் ஆண்டு செப்டம்பர் 6 ம் தேதி வெளியானது. ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். கேரளாவில் ஒரு மலையோர கிராமத்தில் இறைச்சிக்காகக் கொண்டு வரப்படும் ஒரு எருமை, கட்டை அவிழ்த்து ஓடுகிறது. அந்த எருமையை ஊர் மக்களே சேர்ந்து பிடிப்பது தான் இந்தப் படத்தின் கதையாகும். கேரள அரசின் விருதும் பெற்ற இந்த ஜல்லிக்கட்டு படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படம் 93வது ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. வெளிநாட்டு மொழிகள் பிரிவில் இந்தப் படம் கலந்து கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் விருதுக்கான கடைசி 15 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்தப் பட்டியலில் ஜல்லிக்கட்டு இடம் பெறவில்லை. அடுத்த மாதம் (மார்ச்) 15ம் தேதி இதிலிருந்து 5 படங்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. அந்தப் பட்டியலில் இருந்து தான் வெளிநாட்டு மொழிகளுக்கான சிறந்த படம் அறிவிக்கப்படும்.

You'r reading ஆஸ்கார் பட்டியலில் இருந்து மலையாள படம் ஜல்லிக்கட்டு வெளியேற்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருப்பதியில் 19ஆம் தேதி ரதசப்தமி : 11ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்