சொந்த சித்தி என்றும் பாராமல் சுட்டுக் கொன்ற கடத்தல் கும்பல்...கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

Woman shot dead at Maraiyur, Idukki

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது மறையூர் என்ற கிராமம். இப்பகுதி சந்தனத்திற்கு பிரசித்தி பெற்றதாகும். இங்கு உள்ள வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இங்கிருந்து உலகம் முழுவதும் சந்தனம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சந்தன மரங்கள் இருந்தால் சந்தன கொள்ளையர்களும் இருப்பது வழக்கம்தான். இதனால் இப்பகுதியில் ஏராளமான சந்தன கொள்ளையர்களின் நடமாட்டம் உண்டு. போலீசார் பல அதிரடி நடவடிக்கை எடுத்த போதிலும் சந்தனக் கொள்ளையர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.



தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான தோப்புகளில் உள்ள சந்தன மரங்களை கடத்தி விற்பது தொடர்ந்து வந்தது. இப்பகுதியில் காளியப்பன் என்பவர் தலைமையில் ஒரு கடத்தல் கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இக்கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் போது காளியப்பனின் சித்தியான சந்திரிகா (35) பார்த்து விட்டார். அவர் இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதை அறிந்த காளியப்பன் நேற்றிரவு தன்னுடைய கூட்டாளிகள் 2 பேரை அழைத்துக்கொண்டு சந்திரிகாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார்.

அப்போது திடீரென தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் சந்திரிகாவை சரமாரியாக சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். சத்தத்தை கேட்டு அப்பகுதியினர் விரைந்து வந்தனர். ஊர் மக்களை பார்த்ததும் காளியப்பன் கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. ஆனால் அப்பகுதியினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த சந்திரிகாவை உடனடியாக அங்குள்ள மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading சொந்த சித்தி என்றும் பாராமல் சுட்டுக் கொன்ற கடத்தல் கும்பல்...கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா கட்டுப்பாடுடன் விநாயகர் சதூர்த்தி விழா.. சந்தைகளில் மக்கள் கூட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்