ஆம்புலன்சில் பலாத்காரம் இளம்பெண்ணிடம் வாக்குமூலம் எடுக்க முடியாதது ஏன்?

Covid 19 patient raped by ambulance driver in stress

கேரளாவில் ஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் போலீசாரால் அவரிடம் இதுவரை கூடுதலாக வாக்குமூலம் எதுவும் பெற முடியவில்லை.கேரள மாநிலம் ஆரன்முளா என்ற இடத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆம்புலன்சில் வைத்து கொரோனா பாதித்த 19 வயதான இளம்பெண்ணை அதன் டிரைவரே பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.போலீசார் ஆம்புலன்ஸ் டிரைவரான நவ்ஃபல் என்பவரைக் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது. கிரிமினலான ஒருவரை எப்படி 108 ஆம்புலன்ஸ் டிரைவராக நியமிக்கலாம் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த இளம்பெண் சம்பவம் நடந்த அன்று இரவில் போலீசாரிடம் முதற்கட்ட வாக்குமூலம் கொடுத்தார். அதன்பின்னர் அவர் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதையடுத்து கூடுதல் சிகிச்சைக்காக அவரை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு ஒரு சிறப்பு மருத்துவக் குழு கவுன்சிலிங்கும் அளித்து வருகிறது. ஆனாலும் அவர் பழைய மனநிலைக்கு வரவில்லை.
இதனால் கடந்த இரு தினங்களாக போலீசாரால் அந்த இளம்பெண்ணிடம் கூடுதல் விசாரணை எதுவும் நடத்த முடியாத நிலை உள்ளது. இந்த இளம்பெண்ணின் தாய் மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து கடந்த சில தினங்களாக அவர் அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்சில் ஆரன்முளா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குச் செல்லும் வழியில் தான் டிரைவர் அந்த இளம்பெண்ணைக் கொடூரமாகப் பலாத்காரம் செய்தார். வழக்கமாக ஆம்புலன்சில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருக்கும். அந்த ஆம்புலன்சிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது. எங்காவது தேவையில்லாமல் ஆம்புலன்சை நிறுத்தினால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிந்து விடும். அன்றைய தினம் அந்த ஆம்புலன்ஸ் 15 நிமிடம் மருத்துவமனை செல்லும் வழியில் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. ஆனால் அதைக் கட்டுப்பாட்டில் இருந்த ஊழியர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால்தான் அந்த சம்பவம் உடனடியாக யாருக்கும் தெரியாமல் போனது. ஆம்புலன்ஸ் நின்றவுடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் டிரைவரை அழைத்து விசாரித்திருந்தால் இந்த கொடூர சம்பவம் ஒருவேளை தடுக்கப்பட்டிருக்கலாம். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading ஆம்புலன்சில் பலாத்காரம் இளம்பெண்ணிடம் வாக்குமூலம் எடுக்க முடியாதது ஏன்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கடிதம் போலியானது.. நான் வெளியிடவில்லை!.. அரியர் தேர்வு விவகாரத்தில் சூரப்பா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்