பிரசவத்திற்கு சென்ற மனைவி திரும்பவில்லை மனைவியின் வீட்டுக்கு தீ வைத்த கணவன் 7 பேர் காயம்

பிரசவத்திற்கு சென்ற மனைவி தன்னுடைய வீட்டுக்கு திரும்பி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் மனைவியின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 7 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக குழந்தை காயம் இல்லாமல் தப்பியது. உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ஹர்தேய் மாவட்டத்திலுள்ள இட்டாவ்லி என்ற பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (28). இவருக்கும் ஜூஹி அருகே உள்ள ராட்டுபுர்வா பகுதியை சேர்ந்த மனிஷா என்பவருக்கும் கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் மனிஷா கர்ப்பிணி ஆனார். இதையடுத்து அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் பிரசவத்திற்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் மனிஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் மனிஷாவை போனில் அழைத்த முகேஷ், தன்னுடைய வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டார். பலமுறை அழைத்தும் மனிஷா கணவன் வீட்டுக்கு செல்ல மறுத்து விட்டார். இது முகேஷுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு மீண்டும் மனிஷாவுக்கு போன் செய்த முகேஷ், வீட்டுக்கு திரும்பி வராவிட்டால் பெற்றோர் உட்பட அனைவரையும் உயிரோடு கொளுத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து மனிஷாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மனைவியின் வீட்டுக்கு சென்ற முகேஷ், அவரை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அப்போதும் மனிஷா செல்ல மறுத்து விட்டார்.

ஆத்திரமடைந்த முகேஷ், வீட்டுக் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு மண்ணெண்ணை ஊற்றி வீட்டுக்கு தீ வைத்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைப் பார்த்த பக்கத்து வீட்டினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் மனிஷா உள்பட அவர்கள் வீட்டில் இருந்த 7 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக ஒன்றரை மாத குழந்தை மட்டும் காயமின்றி தப்பியது. காயமடைந்த அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முகேஷை தேடி வந்தனர். இதில் அங்குள்ள ஒரு பஸ் நிலையத்தில் வைத்து பின்னர் முகேஷ் கைது செய்யப்பட்டார்.

You'r reading பிரசவத்திற்கு சென்ற மனைவி திரும்பவில்லை மனைவியின் வீட்டுக்கு தீ வைத்த கணவன் 7 பேர் காயம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரயில்வே காலியிடம் : தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் தேர்வு ..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்