2 நாளில் 94 கோடி... கோட்டை விட்ட காஸ்மோஸ் வங்கி

காஸ்மோஸ் வங்கியில் 2 நாளில் 94 கோடி ரூபாய் கொள்ளை

பூனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பெரிய கூட்டுறவு வங்கி காஸ்மோஸ். நூற்றாண்டு கண்ட சிறப்புள்ள இந்த வங்கியில் ஆகஸ்ட் 11 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் ஏறக்குறைய 94 கோடி ரூபாயை சைபர் கொள்ளையர்கள் திருடியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள்ளாக 28 நாடுகளில் 12,000 ஏடிஎம்களில் 78 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் 2,800 பரிமாற்றங்களில் இரண்டரை கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை உலக அளவிலான வங்கிகளுக்கிடையேயான தொலைதொடர்பை (SWIFT) பயன்படுத்தி, ஹாங்காங்கிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு 13.5 கோடியை பரிமாற்றம் செய்துள்ளனர்.

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை (ATM) கட்டுப்படுத்தும் அமைப்பினுள் (firewall in servers) மாற்றங்களை செய்து இந்த மோசடி நடந்திருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். பரிமாற்றம் நடக்கும் இரண்டு இடங்களுக்கு நடுவே தொழில்நுட்ப மோசடி (fake or proxy server)செய்து இந்த பரிவர்த்தனைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

“பெருந்தொகைக்கு பல்வேறு பரிவர்த்தனைகள் நடப்பதை குறித்து ரிசர்வ் வங்கி, காஸ்மோஸ் வங்கியை எச்சரித்ததை தொடர்ந்து, வங்கியின் இணைய பரிவர்த்தனையை முடக்கியிருக்கிறோம். 100 டாலர் (ரூ.6,900) முதல் 2,500 டாலர் (1.7 லட்ச ரூபாய்) வரை பல்வேறு தொகை எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரே பரிவர்த்தனையில் 11,000 டாலர் அதாவது 7.6. லட்ச ரூபாய் மாற்றப்பட்டுள்ளது. இந்த இணைய திருட்டு குறித்து பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது,” என்று வங்கியின் தலைவர் மிலிந்த் காலே கூறியுள்ளார்.

அடையாளம் தெரியாத நபர்கள் மேல் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பெரிய அளவு தகவல் தொழில் நுட்பம் மற்றும் இணைய வழி திருட்டை செய்யும் லாசரஸ் என்று வடகொரிய கும்பல் இதை செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

You'r reading 2 நாளில் 94 கோடி... கோட்டை விட்ட காஸ்மோஸ் வங்கி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'ஓலா' ஓடி வந்த பாதை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்