திகார் சிறையில் சிவக்குமாரை சந்தித்து பேசினார் சோனியா..

Sonia Gandhi visits Tihar jail to meet DK Shivakumar

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரை கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்து பேசினார்.

கர்நாடக காங்கிரசில் முக்கியமானவர் டி.கே.சிவக்குமார். இவர் சித்தராமையா முதல்வராக இருந்த போது, நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தார். சிவக்குமார் பெரும் தொழிலதிபர். குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் அகமது படேலை தோற்கடிப்பதற்கு பாஜக முயன்ற போது, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து தனது ரிசார்ட்டில் தங்க வைத்து, அகமது படேல் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்.

சமீபத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் தீவிரம் காட்டிய போது, அதை முறியடிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டவரும் இதே சிவக்குமார்தான். ஆனால் அவருடைய முயற்சிகள் பலிக்காமல், பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனாலும் டி.கே.சிவக்குமாரை பழி தீர்க்க, அவர் மீது மத்திய அரசு குறி வைத்தது.

இந்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டி, டெல்லி அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 3ம் தேதியன்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி விட்டு இரவில் கைது செய்தனர். அவர் போலி கம்பெனிகள் நடத்தி, ரூ.200 கோடிக்கு மேல் ஹவாலா பரிமாற்றங்களை மேற்கொண்டிருக்கிறார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவக்குமாருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. சிவக்குமாரை, கடந்த மாதம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, அகமது படேல் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று(அக்.23) காலையில் திகார் சிறைக்கு வந்தார். அங்கு சிவக்குமாரை சந்தித்து சிறிது நேரம் பேசி விட்டு சென்றார். ஏற்கனவே திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும் சோனியா காந்தி சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்புகளின் மூலம், சிதம்பரம், சிவக்குமார் ஆகியோர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், காங்கிரஸ் என்றும் அவர்களுக்கு துணை நிற்கும் என்பதையும் சோனியா வெளிப்படுத்தியுள்ளார்.

You'r reading திகார் சிறையில் சிவக்குமாரை சந்தித்து பேசினார் சோனியா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மகாராஷ்டிரா, அரியானா தேர்தல்.. நாளை வாக்கு எண்ணிக்கை.. கணிப்புகளில் முந்திய பாஜக..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்