ஐரோப்பிய எம்.பி.க்கள் வந்திருப்பது எதற்காக? ப.சிதம்பரம் கிண்டல்..

European MPs may be invited to attend Parliament : chidambaram

நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக பேசுவதற்காக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதன்பின், முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டனர். இது வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. மேலும், தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.

இந்நிலையில், காஷ்மீருக்கு ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் 27 பேர் கொண்ட குழு இந்தியாவுக்கு வந்தது. அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்தனர்.

இதன்பின்னர், 4 எம்.பி.க்கள் காஷ்மீருக்கு செல்லாமல் அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் சென்று விட்டனர். அதில் இங்கிலாந்து எம்.பி. கிறிஸ் டேவிஸ் என்பவர், நான் காஷ்மீரில் சுதந்திரமாக மக்களிடம் கருத்து கேட்பதாக கூறினேன். அதை இந்திய அரசு ஏற்கவில்லை. இந்திய அரசு எதையோ மறைக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே, 23 ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் காஷ்மீருக்கு சென்றனர். அங்கு அவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள மக்கள் பிரதிநிதிகளை மட்டும் சந்தித்து விட்டு சுற்றுலா தலங்களை சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் யாருக்கு தெரியும்? நமது நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக பேசுவதற்காக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கிண்டலடித்துள்ளார். அடுத்தடுத்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டாலும், ட்விட்டரில் அரசை விமர்சிப்பதை மட்டும் அவர் விட்டுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஐரோப்பிய எம்.பி.க்கள் வந்திருப்பது எதற்காக? ப.சிதம்பரம் கிண்டல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்