நவ.17ம் தேதி டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம்.. நாடாளுமன்றத் தொடர் துவக்கம்

All Party Meeting has been called by Union Minister Pralhad Joshi on 17th November

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி, வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரை டிசம்பர் 13ம் தேதி வரை நடத்துவது என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, 2வது முறையாக பதவியேற்றதும் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 36 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மசோதாக்கள் மீது போதிய நேரம் விவாதம் நடத்தப்படாமல், அவசர, அவசரமாக நிறைவேற்றப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனாலும், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரிலும் பல்வேறு புதிய சட்டமசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இ-சிகரெட்டுகளுக்கு தடை, கார்ப்பரேட் வரிக்குறைப்பு போன்ற அவசரச் சட்டங்களுக்கு மாற்றுச் சட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தொடரில் காஷ்மீர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், அவையை சுமுகமாக நடத்துவதற்காக அனைத்து கட்சிக் கூட்டத்தை மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூட்டியுள்ளார். இக்கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You'r reading நவ.17ம் தேதி டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம்.. நாடாளுமன்றத் தொடர் துவக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டலாம்.. சுப்ரீம் கோர்ட் அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்