பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன்.. ப.சிதம்பரம் பேட்டி

p.chidambaram says he will never fall and always speak against bjp

நான் ஒரு போதும் வீழவே மாட்டேன். தினமும் பாஜகவை எதிர்த்து பேசுவேன், எழுதுவேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி 105 நாட்களுக்கு பிறகு விடுதலையான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் (டிச.7), சென்னைக்கு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது:

நாட்டில் இப்போது சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சுதந்திரமான கருத்துக்களும், எதிர்ப்ப குரல்களும் ஒடுக்கப்படுகின்றன. காஷ்மீரில் 75 லட்சம் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. ஒருவரின் சுதந்திரம் மறுக்கப்பட்டால், அது அனைத்து மக்களின் சுதந்திரமும் பறிக்கப்பட்டதற்கு ஒப்பாகும். நாட்டில் வலதுசாரி எண்ணம் கொண்ட, சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய ஆட்சி நடைபெறுகிறது.

கர்நாடகாவில் காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரா மற்றும் ஒருவர் வீடுகளில் ரெய்டு நடத்தினார்கள். அதை பார்த்து பயந்து காங்கிரசில் இருந்த கே.சி.ராமமூர்த்தி, பாஜகவுக்கு தாவினார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு வலது, இடது கரமாக இருந்த எம்.பி.க்கள் சி.எம்.ரமேஷ், ஒய்.எஸ்.சவுத்ரி ஆகியோர் மீது வழக்குகள் இருந்தன. அவர்கள் இப்போது பாஜகவில் சேர்ந்து விட்டனர். பாஜக என்ற கங்கையில் மூழ்கினால் பாவங்கள் எல்லாம் போய் விடும் போல... நான் ஒருபோதும் கங்கையில் குளிக்க மாட்டேன்.

தமிழக மக்கள் வெளிப்படுத்திய எச்சரிக்கை உணா்வை எப்போது மற்ற மாநில மக்கள் வெளிப்படுத்துகிறார்களோ, அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும். பாஜகவை கடுமையாக எதிர்த்தது தமிழக மக்கள்தான். தமிழக மக்களை நான் பாராட்டுகிறேன். இந்த மக்களின் எதிர்ப்புணர்வு, நாடு முழுவதும் பரவ வேண்டும்.
என் மன உறுதியைக் குலைக்க வேண்டும் என்பதற்காக என்னை இத்தனை நாள் சிறையில் அடைத்தனா்.

ஆனால், என் மன உறுதி ஒரு நாளும் குலையாது. நான் ஒருபோதும் வீழவே மாட்டேன். எனக்குப் பின்னால் இருப்பது காங்கிரஸ் கட்சியும், இந்திய மக்களுடைய சுதந்திர தாகமும்தான். இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு போய் கொண்டிருக்கிறது. பாஜகவுக்கு எதிராக நாள்தோறும் தொடா்ந்து பேசுவேன், தொடர்ந்து எழுதுவேன்.

இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

You'r reading பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன்.. ப.சிதம்பரம் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்