`சத்தியம் செய்தார் கருவை கலைத்தேன் - திருமணத்துக்கு முன்பே நிச்சயித்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு `எஸ்கேப் ஆன ஜவுளி வியாபாரி

graduate girl pregnant before marriage

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளார் ஜவுளி வியாபாரியின் மகன்.

சென்னிமலை, ஈங்கூர் ரோட்டில் உள்ள காந்திஜி வீதியில் ஜவுளி தொழில் செய்து வருபவர் சாமியப்பன். இவர் சென்னிமலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் ரகு. இதேபகுதியைச் சேர்ந்த தந்தையை இழந்த பொறியியல் பட்டதாரி ஜீவிதா என்ற பெண் ஒருவருக்கு திருமணத்துக்கான வரன் பார்த்துள்ளனர். அதன்படி தரகர் மூலம் ரகுவை வரன் பார்த்துள்ளனர். இதனால் ரகுவின் பெற்றோர் பெண் பார்க்க வந்ததுடன், திருமணத்திற்கும் சம்மதம் தெரிவிக்க திருமணம் நிச்சயம் ஆனது.

இதற்கடுத்து நடந்த சம்பவங்களை விவரிக்கும் அந்தப் பெண் ஜீவிதா, ``தரகர் ஒருவர் மூலம் எனக்கு ரகுவின் ஜாதகம் வந்தது. அந்த ஜாதகம் எங்களுக்கு பொருந்தி இருந்ததால் திருமணம் உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு நான் ரகுவிடம் பேசி கொள்வதற்காக தனியாக எனக்கு ஒரு செல்போனை ரகு வாங்கி கொடுத்தார். மேலும் எங்கள் வீட்டிற்கு ரகு அடிக்கடி வருவார். எங்கள் திருமணத்திற்கு மண்டபம் கிடைக்காமல் போனதால் திருமணம் தள்ளி கொண்டே போனது.

கடந்த டிசம்பர் 23 -ந் தேதி இரவு எங்கள் வீட்டிற்கு ரகு வந்தார். அப்போது எனது அம்மா வெளியூர் சென்று விட்டதால் நான் தனியாக இருந்தேன். அந்த தனிமையை பயன்படுத்தி ரகு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நான் எவ்வளவோ மறுத்தும் என் விருப்பத்திற்கு மாறாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். திருமணம் ஆவதற்கு முன்பே என்னை இப்படி செய்து விட்டீர்களே என நான் கதறி அழுதேன். அதற்கு அவர், நான் உயிர் உள்ளவரை உன்னை கை விடமாட்டேன் என சத்தியம் செய்தார்.

அதன் பின்னரும் திருமணம் தள்ளிக்கொண்டே போனது. அந்த சமயத்தில் மருத்துவ சோதனை செய்து பார்த்த போது நான் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. நான் பயந்து போய் ரகுவிடம் சொல்லி அழுதேன். அதற்கு கவலைப்படாதே, உன்னை எந்த சூழ்நிலையிலும் கை விடமாட்டேன் என சத்தியம் செய்து எனக்கு கருச்சிதைவு மாத்திரை வாங்கி கொடுத்தார். திடீரென என் வீட்டுக்கு வருவதை ரகு நிறுத்தி கொண்டார். விசாரித்ததில் என்னை விட அதிகம் வசதியுள்ள வேறு பெண்ணை ரகு திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதும், இதற்காக ரகு வீட்டில் பந்தல் போட்டிருப்பதும் தெரியவந்தது.

இதுபற்றி உறவினர்கள் மூலம் கேட்ட போது நல்ல முடிவை சொல்கிறோம் என கூறிய ரகுவின் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்கள். அவரது பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ரகு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

You'r reading `சத்தியம் செய்தார் கருவை கலைத்தேன் - திருமணத்துக்கு முன்பே நிச்சயித்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு `எஸ்கேப் ஆன ஜவுளி வியாபாரி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜொலிஜொலித்த சாயிஷா… பூரிப்பில் ஆர்யா.. வாழ்த்துகள் மணமக்களே

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்