கோடைக்காலத்திற்கேற்ற உணவு பழக்கம்

The best summer diet

கோடை விடுமுறை காலமாக இருப்பதால் எங்கு சுற்றுலா செல்லலாம் என்றும் ஆலோசித்துக் கொண்டிருப்போம். சுற்றுலா சென்றாலும், வீட்டிலேயே இருந்தாலும் அடிக்கும் வெயிலுக்கு இதமாக நம் கண்முன் வந்து நிற்பவை குளிர்பானங்களும், ஐஸ்கிரீமும்தான்.
 
ஒவ்வொரு காலநிலைக்கும் சில உணவுப் பழக்கங்களே நம் உடலுக்கு ஏற்றவை. கோடைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய உணவுப்பழக்கங்களை கீழே காணலாம். உடல்நல பாதிப்பில்லாமல் கோடையை கடப்பதற்கு இந்த ஆலோசனை நிச்சயமாகவே உதவும்.
 
தண்ணீர் அருந்துங்கள்:
 
கோடையும் தாகமும் பிரிக்க இயலாதவை; இணைந்தே இருப்பவை. தாகம் எடுக்கும்போது குளிர்ச்சியாக ஏதாவது பானத்தை அருந்த வேண்டும் என்ற ஆசை பிறக்கும். செயற்கை குளிர்பானங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட பெருநிறுவனங்களின் குளிர்பானங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை அல்ல. அவற்றை அருந்துவதால், தேவைக்கு அதிகமான ஆற்றல் (கலோரி) உடலில் சேரும். ஆகவே, குளிர்பானங்களை தவிர்த்து விட்டு, நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர் மற்றும் இளநீர் அருந்துவது நல்லது.
 
 
பழங்கள் சாப்பிடுங்கள்:
 
ஒருநாளுக்கு குறைந்தது இருமுறை பழங்கள் சாப்பிட வேண்டும். கோடைக்காலத்தில் முடிந்த அளவுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பழம்
மற்றும் பாலை சேர்த்து மிக்ஸியில் அடித்து, 'மில்க் ஷே க்' தயாரித்தும் அருந்தலாம். 
 
 
உண்ணாமல் இருக்க வேண்டாம்:
 
கோடைக்காலத்தில் ஒருவேளை, இருவேளை என்று உணவுகளை தவிர்க்க வேண்டாம். சிலர் உடல் எடையை குறைக்கிறேன் என்று உண்பதை தவிர்ப்பார்கள். கோடைக்காலத்தில் இப்படி சாப்பாட்டை தவிர்க்க வேண்டாம். உணவுகளை தவிர்ப்பது உடலில் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். சிறிது அளவேனும் உணவு உண்ண வேண்டும்.
அதை பலமுறையாக பிரித்து சாப்பிடலாம்.
 
உணவு அட்டவணை:
 
வாரம் முழுவதும் நீங்கள் என்னென்ன உணவு பதார்த்தங்களை சாப்பிடுகிறீர்கள் என்பதை ஓர் அட்டவணையாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, எவ்வளவு ஆற்றலுக்கான (கலோரி) உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதை சரியாக கணக்கிட முடியும். தேவைக்கு
அதிகமான உணவுகளை அடையாளங்கண்டு, அவற்றை தவிர்க்க இது உதவும்.
 
தயிர் மற்றும் யோகர்ட்:
 
மோர் மற்றும் தயிர் ஆகியவற்றை முடிந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சுவைக்காக மட்டுமல்ல, கோடையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய பண்புக்காகவும் இவை அவசியம். சுவைக்காக, சிறிது கொத்துமல்லி தழைகளை சேர்த்துக் கொள்ளலாம். நிலைப்படுத்தப்பட்டு, சுவையூட்டப்பட்ட தயிரும் (யோகர்ட்) அருந்தலாம்.
வெயிலில் செல்லும் முன்னர் ஒரு தம்ளர் மோர் அருந்துதல் மிக நன்று.
இந்த எளிய பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் கோடையில் உடல் நலத்தை காத்துக்கொள்ளலாம்.

You'r reading கோடைக்காலத்திற்கேற்ற உணவு பழக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேர்வுக்குப் பின்னான மனநிலை: எப்படி கையாள்வது?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்