கொரோனாவுக்கு இப்படி மருத்துவம் செய்ய முடியுமா?

Is it possible to treat corona like this

'கொரோனாவை பற்றி இன்று என்ன தகவல் புதிதாய் வந்துள்ளது?' என்று தினமும் கூகுளில் தேடுகிறீர்களா? இணையதளங்களில் கூறப்பட்டுள்ள கொரோனா அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதுபோல் தோன்றுகிறதா? இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் 'ஆம்' என்றால் நீங்கள் பெருங்கூட்டத்தில் ஒருவராய் இருக்கிறீர்கள். உலகமெங்கும் கோவிட்-19 கிருமி தாக்குதலுக்கு தீர்வை எத்தனையோ பேர் இணையதளங்களில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

கொட்டிக்கிடக்கும் தகவல்

இணையம் முழுவதுமே தகவலால் நிறைந்திருக்கிறது. எதைக் குறித்து நீங்கள் தேடினாலும் மலைமலையாய் தகவலை காணமுடியும். அதிகமாக தகவல் கிடைப்பதால், குழப்பமும் அதிகமாகிறது. குழப்பத்தின் காரணமாக மனச்சோர்வு வருகிறது. நோய் அறிகுறிகள் மற்றும் நோய் பற்றி இணையத்தில் அதிகமாக தேடுவதன் காரணமாக வரும் மனக்கலக்கத்திற்கு சைபர்கோண்ட்ரியா என்று பெயரிடப்பட்டுள்ளது.

தலைவலியும் இரத்தக்கொதிப்பும்

இன்று அனைவரும் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களிலேயே தகவலை தேட முடியும். அதற்கென தனி முயற்சி செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே, எதைக் குறித்தாவது தேடிக்கொண்டே இருக்கிறார்கள். கொரோனா பரவ ஆரம்பித்ததும் அதைக் குறித்த தேடலும் ஆரம்பித்தது. நாள்தோறும் கொரோனாவை பற்றிய புதிய தகவல் வந்து கொண்டே இருப்பதால் தேடலும் தொடர்கிறது. கூகுளில் தேடி தேடி படித்து, அறிகுறிகள் இருப்பதுபோன்ற சந்தேகம் எழுந்து, அதைத் தொடர்ந்து பயம் உருவாகி, இரத்தக்கொதிப்பு, தலைவலி ஆகிய உடல்நலக் கேடுகளும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவும் ஏற்படுகிறது.

தேடுவதை குறையுங்கள்

மருத்துவமனைக்குச் செல்வதை மக்கள் தவிர்ப்பதும் இணையத்தை மருத்துவராக கருதுவதில் முடிகிறது. மருத்துவமனைக்குச் சென்றால் கொரோனா இருப்பதாகக் கூறிவிடுவார்களோ என்ற பயத்தில் போகாமல் இருந்துகொண்டு, இணையத்தில் தகவலை தேடுவதால் மன அமைதியை இழக்கநேரிடுகிறது; நேரமும் வீணாகிறது. ஆகவே, எல்லா இணையதளங்களிலும் தேடுவதை நிறுத்துங்கள். நோய்க்குத் தேவையான ஆலோசனைகளை சரியானவிதத்தில் வழங்கக்கூடிய ஒரே ஒரு இணையதளத்தை மட்டும் தகவலுக்காக வாசிப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளலாம்.

இணைய தேடல்

இணையத்தில் தேடும்போது உங்கள் தேடலுக்கான விடைகள் எப்படி வரிசைப்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள். தேடலுக்கு விடையாக முதலாவதாக வருவதால் அந்த இணையதளம் சரியான தகவலை அளிக்கிறது என்று கூற இயலாது. ஆர்வத்தின் காரணமாக அநேகர் வாசிக்கும் இணையதளம் கூட வரிசையின் மேலே இடம் பிடிக்கக்கூடும்.

தேடலை தாமதப்படுத்துங்கள்

எந்த நோயைப்பற்றியாவது இணையத்தில் தேட வேண்டும் என்ற எண்ணம் வந்தால் உடனடியாக உட்கார்ந்து தேட ஆரம்பித்துவிடாதீர்கள். வேறு ஏதாவது செயலில் மனதை ஈடுபடுத்துங்கள். இணையத்தை பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு வேறொன்றை செய்து நேரத்தை கடத்தினால் தேட வேண்டும் என்ற ஆவல் சற்று குறையும்.

கணினி முன் அமர்வதை குறையுங்கள்

கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருந்தால் மனம் இதை, அதை, அடுத்ததை என்று தேடிக்கொண்டே இருக்கும். வாய்ப்பு இருப்பதினால் எல்லாவற்றையும் தேடி குழப்பத்தை கூட்டிக்கொள்வீர்கள். ஆகவே, எப்போதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்காமல் சமையல், பொழுதுபோக்கு விளையாட்டுகள், வெளியே நடைபயிற்சி செல்லுதல் உள்ளிட்ட வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டால் கணினியில் செலவழிக்கும் நேரம் குறையும்; குழப்பத்தையும் தவிர்க்கலாம்.

You'r reading கொரோனாவுக்கு இப்படி மருத்துவம் செய்ய முடியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிசிடிவி பழுது நீக்கும் பயிற்சி வழங்கும் இந்தியன் வங்கி !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்