மூட்டு வலியை போக்கும்... இரத்த சிவப்பணுவுக்கு வலிமை தரும் எண்ணெய் எது தெரியுமா?

Uses and benefits of mustard oil

கொரோனா தொற்றுநோய் உடல் ஆரோக்கியத்தை குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க என்ன செய்யலாம் என்ற தேடுதல் கூடியுள்ளது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாக சந்தையில் பல பொருள்கள் விற்கப்படுகின்றன. ஆனால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குறுக்கு வழி எதுவும் இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உரிய உணவு பொருள்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மட்டுமே நம் உடல் நோய்களை, கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் பெறும். உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தரக்கூடிய ஒன்று கடுகு எண்ணெய் என்பதை உணவியல் வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் பாரம்பரியமாகவே உடல் நலத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடலில் கொலஸ்ட்ராலின் அளவை சமநிலையாக பேணக்கூடிய எம்யூஎஃப்ஏ எனப்படும் ஒருபடித்தான கொழுப்பு அமிலங்கள் கடுகு எண்ணெயில் உள்ளன. இதய ஆரோக்கியத்தை பேணக்கூடிய ஆல்பா லினோலெனிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. கடுகு எண்ணெய்க்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சைக்கு எதிராக செயல்படக்கூடிய இயல்பு உண்டு. இது நம் உணவுக்குழலில் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக்கூடிய ஒமேகா 3, ஒமேகா 5 கொழுப்பு அமிலங்களும் வைட்டமின் இ சத்தும் கடுகு எண்ணெயில் நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

தலையிலுள்ள சைனஸ் எனப்படும் காற்றறைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்கு கடுகு எண்ணெயின் கடுமையான நெடி உதவுகிறது. கடுகு எண்ணெயுடன் சில பல் வெள்ளைப் பூண்டை சேர்த்து சூடாக்கி பாதத்திலும் மார்பிலும் தேய்த்தால் இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரத்த சிவப்பு அணுக்களுக்கு வலிமை

பிளாஸ்மா, செல் லிப்பிடுகள் மற்றும் செல் சவ்வு போன்றவற்றின் பல்வேறு உயிரியல் செயல்பாடுகள் நடப்பதற்கு அத்தியாவசியமான எல்லா கொழுப்புகளும் கடுகு எண்ணெயில் உள்ளன. கடுகு எண்ணெய் கொலஸ்ட்ராலை குறைப்பதோடு இரத்த சிவப்பு அணுவின் சவ்வு வடிவமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.

இருதய ஆரோக்கியம்

இதய துடிப்பில் ஒழுங்கின்மை, இருதய செயலிழப்பு, இருதய தசைகளுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமை போன்ற அபாயங்களை குறைக்கும் இயல்பு கடுகு எண்ணெய்க்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருதயத்தில் ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் கடுகு எண்ணெய் நல்லதாகும். டிரைகிளிசராய்டுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அழற்சி ஆகியவற்றையும் இது குறைக்கிறது.

சுவாச மண்டலம்

சுவாசிக்க முடியாமல் அடைப்பு இருப்பதாக உணர்ந்தால் கடுகு எண்ணெயை சூடாக்கி அதில் வரும் ஆவியை உரிய பாதுகாப்போடு நுகரலாம். அது சுவாச மண்டல அடைப்பினை போக்கும். கடுகு எண்ணெய், வெள்ளைப்பூண்டு மற்றும் ஓமம் இவற்றை சேர்த்து சூடாக்கி, பாதம் மற்றும் நெஞ்சில் தடவினால் சளி மற்றும் இருமல் கட்டுப்படும். சைனஸ் தொந்தரவு உள்ளவர்களுக்கு கடுகு எண்ணெய் நல்ல பயன் தரும்.

மூட்டு வலி

கடுகு எண்ணெய் பயன்படுத்தி தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் தசைகள் மற்றும் மூட்டுகளில் உள்ள வலி குறையும். கடுகு எண்ணெயிலுள்ள ஒமேகா 3, முடக்குவாதத்தின் காரணமாக ஏற்படும் விறைப்புத்தன்மை மற்றும் வலியை குறைக்கும்.

You'r reading மூட்டு வலியை போக்கும்... இரத்த சிவப்பணுவுக்கு வலிமை தரும் எண்ணெய் எது தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்