சீசன் மாறிப்போச்சு! என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்? தெரிந்துகொள்ளுங்கள்!

"சீசன் மாறிடுச்சு!" என்றபடியே பலர் கவலைப்பட தொடங்கிவிடுகின்றனர். பருவநிலை மாறுகிறது என்றாலே பலரை பயம் பிடித்துக்கொள்கிறது. பருவகால மாற்றம் பல்வேறு உடல்நல குறைபாடுகளுக்குக் காரணமாகிவிடுவதால் மனதளவில் நோயாளிகளாக மாறிவிடுகின்றனர். எளிதாக கிடைக்கக்கூடிய சில பழங்கள் நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, எந்த பருவநிலையையும் தைரியமாக எதிர்கொள்ளும் உடல் தகுதியை அளிக்கின்றன. குறிப்பாக, மழை மற்றும் குளிர் காலங்களில் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை தரக்கூடிய பழங்கள் எவை என்று பார்க்கலாம்.

கொய்யா

குளிர் காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்றது கொய்யா. சுவையில் மட்டுமல்ல, உடலுக்குத் தேவையான சத்துகளை கொண்டிருப்பதிலும் இது சிறந்தது. நம் உடலின் செல்களை பாதிக்கக்கூடிய நிலையற்ற அணுக்களை (ஃப்ரீ ராடிகல்ஸ்) எதிர்த்து செயல்படக்கூடிய ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்டுகள்) கொய்யாவில் அதிகம் உள்ளன. கொய்யாவில் வைட்டமின் சி சத்தும் அதிகம் காணப்படுகிறது. கொய்யாவில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து, இருதய ஆரோக்கியத்தையும், இரத்த சர்க்கரை அளவையும் சரியாக பேணுவதற்கு உதவுகிறது.

பேரிக்காய்

இளம்பச்சை நிறத்தில் இருக்கும் பியர்ஸ் எனப்படும் பேரி, சிறியவர் பெரியவர் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவதாகும். பேரிக்காய், வயிற்றுக்கு நல்லது. இதிலுள்ள அழற்சிக்கு எதிராக செயல்படும் தன்மையும், ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களும் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்டுகள்), வைட்டமின்கள் இ மற்றும் சி ஆகியவையும் உடலுக்கு நன்மை செய்கின்றன.

ஆரஞ்சு

பருவகால மாற்றத்தில் உடலை ஆரோக்கியமாக காக்கக்கூடிய பழங்களில் ஆரஞ்சு முக்கியமானது. வைட்டமின் சி, கால்சியம் ஆகிய சத்துகள் ஆரஞ்சை சிறந்த பழமாக விளங்க செய்கின்றன. ஆரஞ்சை பழமாக சாப்பிடலாம் அல்லது பழத்தை சாறு பிழிந்து அருந்தலாம்.

ஆப்பிள்

ஆப்பிளில் அடங்கியுள்ள சத்துகளை கருத்தில் கொண்டே அதை ஒரு மருத்துவருக்கு ஒப்பிடுகிறார்கள். உடலில் அழற்சி ஏற்படாமல் தடுத்து, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் ஆப்பிள் அதிகரிக்கிறது. இதில் பெக்டின் என்னும் நார்ச்சத்து, வைட்டமின்கள் சி மற்றும் கே ஆகியவை அடங்கியுள்ளன.

சாத்துக்குடி

ஆரஞ்சை போன்று சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த சத்துகள் நிறைந்த பழம் சாத்துக்குடி ஆகும். இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. சாத்துக்குடியை அதிகம் அடிக்காமல் சாறு பிழிந்து அருந்தினால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

மாதுளை

உடலின் செல்களை பாதிக்கும் நிலைத்தன்மை இழந்த அணுக்களின் (ஃப்ரீ ராடிகல்ஸ்) பாதிப்பிலிருந்து உடலை காக்கும் ஆற்றல் மாதுளைக்கு உள்ளது. மாதுளை, இரத்தத்திற்கு நல்லது. இது இரத்த அழுத்தம் ஏற்படாதவண்ணம் இரத்தத்தை காக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. உடல் எடையை குறைக்க மாதுளை உதவும். சரும பாதிப்பு ஏற்படாமலும் மாதுளை பாதுகாக்கிறது.

பிளம்ஸ்

நோயை எதிர்த்து போராடக்கூடிய ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்டுகள்) பிளம்ஸில் அதிகம் உள்ளன. புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும் இதற்கு உண்டு என்று கூறப்படுகிறது. அதைக் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்தப் பழங்களை சாப்பிட்டால் காலநிலை எப்படி மாறினாலும் கவலையின்றி எதிர்கொள்ளலாம்.

You'r reading சீசன் மாறிப்போச்சு! என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்? தெரிந்துகொள்ளுங்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரான்சில் மீண்டும் கொடூரம் 3 பேர் குத்திக் கொலை.. பெண் கழுத்து அறுத்து கொலை.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்