இனிப்பில்லாத இனிப்பு: டயபடீஸ் இருப்பவர்களும் சாப்பிடலாம்

இனிப்பு சுவையை விரும்பாதோர் யாருமே இருக்க முடியாது. ஆனால், இனிப்பே சாப்பிடக்கூடாது என்ற கட்டாயத்தில் அநேகர் உள்ளனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்போரின் எண்ணிக்கை ஏராளம். சர்க்கரை நோய் வரக்கூடிய அபாய கட்டத்தில் இருப்போரும் அநேகர். ஆகவே, பண்டிகை காலம் என்றாலும் அவர்களால் இனிப்பை சாப்பிட்டு மகிழ இயலாது.

இனிப்பு சுவையை அளிக்கும் தாவரம் ஒன்று உள்ளது. இது சர்க்கரையை விட 200 முதல் 350 மடங்கு அதிக இனிப்பை தரக்கூடியது. ஆனால் எரிசக்தி (கலோரி) இதில் கிடையாது. இந்த தாவரத்தின் இலையை எடுத்து சாறு பிழிந்தால் அது இனிப்பு மயமாக இருக்கும். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையின் (USFDA) அங்கீகாரம் மற்றும் பாதுகாப்புக்கான பொது அங்கீகார வகை (GRAS) தரம் இவற்றை பெற்றுள்ள இந்த தாவரத்தின் பெயர் 'சீனி துளசி' (ஸ்டீவியோ ரியோடியானா) ஆகும்.

சீனி துளசியின் இலை மட்டுமே நமக்குப் பயன்படுகிறது. இத்தாவரம் பூத்தால் வளர்ச்சி நின்று விடும். ஆகவே, பூக்கள் தென்படும்போது நுனியை கிள்ளி பூக்களை எடுத்துவிடுவர். சிறந்த முறையில் இச்செடியை பராமரித்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை நல்ல பலன் கிடைக்கும். கிளைகளை 10 முதல் 15 செ.மீ உயரத்தில் வெட்டி எடுத்து இலைகளை பிரித்து பயன்படுத்தலாம்.

உடல் எடை
ஆரோக்கியமான சமச்சீர் உணவு பழக்கத்தை கடைபிடிக்க விரும்புவோருக்கு சீனி துளசி ஏற்றது. இதிலிருந்து நம் உடலில் சிறிதும் எரிசக்தி (கலோரி) சேர்வதில்லை. முழுவதும் இயற்கையான விதத்தில் நம் உடல் இதை செரிக்கிறது.

இன்சுலின்
சீனி துளசி சாறு நம் செரிமான மண்டலத்தை கடக்கும்போது மற்ற சர்க்கரைகளைப் போல எரிசக்திக்காக (கலோரி) அது உடைக்கப்படுவதில்லை. ஏனைய சர்க்கரைகள் செரிமான மண்டலத்தில் உடைக்கப்பட்டு இரத்தத்தில் கிரகிக்கப்படுகிறது. சீனி துளசி செரிமானத்தின்போது உடைக்கப்படாததால் இரத்த சர்க்கரையிலும் இன்சுலின் சுரப்பிலும் சிறிய விளைவினையே ஏற்படுத்துகிறது.

இரத்த அழுத்தம்
சீனி துளசி, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரத்த அழுத்தத்தை குறைத்து இதய துடிப்பை சீராக்கும் பண்பு கொண்டிருப்பதால் இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

பற்கள்

சீனி துளசியின் சாறு பற்சிதைவு, பற்காரை மற்றும் பல் சொத்தை இவற்றை தடுக்கிறது. பொதுவாக சர்க்கரையினால் ஏற்படும் பல் சொத்தைக்கு இது காரணமாவதில்லை. சீனி துளசி இயற்கையான இனிப்பை தருவதால் இனிப்பை விரும்புவோர் யாராயினும் பயமின்றி தாராளமாக பயன்படுத்தலாம்.

You'r reading இனிப்பில்லாத இனிப்பு: டயபடீஸ் இருப்பவர்களும் சாப்பிடலாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கஞ்சா - கோகைன் பயன்படுத்துவார்... பாகிஸ்தானை அதிரவைத்த குற்றச்சாட்டு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்