ஆட்சி கவிழ்ப்பு பீதி குறையல.. கர்நாடக காங். எம்எல்ஏக்களும் ரிசார்ட்டுக்கு பேக் அப்!

Karnataka Congress MLAs pack up to Resort

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை 4 பேர் புறக்கணித்ததால் ஆட்சிக்கவிழ்ப்பு பீதி இன்னும் அக்கட்சித் தலைவர்களிடையே நீடிக்கிறது. இதனால் கூட்டம் முடிந்தவுடன் எம்எல்ஏக்கள் அனைவரும் ரிசார்ட்டுக்கு பேக் அப் செய்யப்பட்டு பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. ஆபரேசன் தாமரை என்ற பெயரிட்டு காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை வளைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. உஷாராக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை டெல்லி அருகே சொகுசு விடுதியில் அடைத்து வைத்தது பா.ஜ.க. இதனால் தங்கள் கட்சி எம்எல்ஏக்களையும் பத்திரப்படுத்த காங்கிரஸ் தலைவர்களும் தீவிரமாகினர்.

எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பங்கேற்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும் நேற்று நடந்த கூட்டத்தில் 4 பேர் பங்கேற்காததால் காங்கிரசுக்கு இன்னும் ஆட்சிக் கவிழும் பீதி இருப்பதாகவே கூறப்படுகிறது. மேலும் சில எம்எல்ஏக்கள் ஊசலாட்டத்தில் இருப்பதாக ரகசிய தகவல் வெளியானதால் எம்எல்ஏக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்க முடிவெடுத்தனர். கூட்டம் முடிந்த கையோடு இரு பேருந்துகளில் எம்எல்ஏக்கள் அனைவரும் ஏற்றப்பட்டு பெங்களூரு புறநகரில் உள்ள கோல்டன் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

வரும் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஒரே இடத்தில் ஆலோசிக்க உள்ளோம். அதற்காகவே சில நாட்களுக்கு ரிசார்ட்டில் எம்எல்ஏக்களை தங்க வைக்கும் முடிவு என முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவருமான சித்தராமையா விளக்கமும் அளித்துள்ளார். எப்படியோ கொஞ்ச நாட்களுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரிசார்ட்டில் ஏக கொண்டாட்டம் தான்.

You'r reading ஆட்சி கவிழ்ப்பு பீதி குறையல.. கர்நாடக காங். எம்எல்ஏக்களும் ரிசார்ட்டுக்கு பேக் அப்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காங்கிரசுடன் கூட்டணி இல்லை - ஆம் ஆத்மி திட்டவட்டம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்