புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன் திரண்ட சர்வகட்சியினர் - போலீசாருடன் தள்ளுமுள்ளு .... பதட்டம்!

Cong-police clash,tension near Puducherry governor house

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது. ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழல் நீடிப்பதால் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்படுவதாகவும், அரசின் கோப்புகளில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதாகவும் கூறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு முதல்வர் நாராயணசாமி 2-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து போராடி வருகின்றனர்.

நாராயணசாமியின் முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரசார் படையெடுத்து வருகின்றனர். போலீசார், அதிரடிப்படை வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு, ஆளுநர் மாளிகைக்குள் தொண்டர்கள் செல்ல முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்புகளை உடைத்து தொண்டர்கள் முன்னேற முயன்றதால் போலீசார் தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஆளுநர் கிரண்பேடி பாதுகாப்புடன் வெளியேறி 6 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். இதற்கு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளதால் புதுச்சேரி முழுவதும் பதற்றமாக காணப்படுகிறது.

புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தர்ணா - அதிரடிப்படை பாதுகாப்புடன் வெளியேறிய கிரண்பேடி!

You'r reading புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன் திரண்ட சர்வகட்சியினர் - போலீசாருடன் தள்ளுமுள்ளு .... பதட்டம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 60 லட்சம் பேரா? - தமிழக அரசு பொய் சொல்வதாக பொது நல வழக்கு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்