என்னை சுட்டுத் தள்ளுங்கள் காங்கிரஸ் தலைவர் ஆவேசம்

Under fire for Lok Sabha poll debacle, Haryana Congress chief reportedly said shoot me

தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில், ‘என்னை காலி செய்ய நினைத்தால், சுட்டுத் தள்ளுங்கள்...’ என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் படுதோல்வி அடைந்தது. அதிலும் பல மாநிலங்களில் அந்த கட்சிக்கு பூஜ்யம்தான் கிடைத்தது. அதில் ஹரியானாவும் ஒன்று. இங்குள்ள 10 மக்களவை தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிஸ் வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வாருக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர்சிங் ஹுடா கோஷ்டியினர் அணி திரண்டுள்ளனர்.

இந்நிலையில், ஹரியானா மாநில காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக உள்ள குலாம் நபி ஆசாத் தலைமையில் தோல்வி குறித்த ஆய்வு கூட்டம், கடந்த 4ம் தேதியன்று டெல்லியில் நடத்தப்பட்டது. இதில், மாநில தலைவர் அசோக் தன்வார், முன்னாள் முதலமைச்சர் ஹூடா, அவரது மகன் தீபிந்தர்சிங் ஹூடா, முன்னாள் சபாநாயகர் குல்தீப் சர்மா மற்றும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த கூட்டத்தில், எல்லோரும் தேர்தல் தோல்விக்கு தன்வாரை குறை கூறியதால், ஆத்திரமடைந்த அவர், ‘என்னை சுட்டுத் தள்ளுங்கள்...’ என்று சத்தம் போட்டிருக்கிறார். இது கூட்டத்தினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இது பற்றி கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில்,
‘‘கூட்டத்தில் குல்தீப் சர்மா தான் முதலில் தன்வார் மீது புகார் கூறினார். கர்னால் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சர்மா, 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று விட்டார். இதற்கு தன்வார் மீது பல காரணங்களை சொன்னார். அதே போல், தன்னை ஒரு கூட்டத்திற்கு தன்வார் அழைக்கவே இல்லை என்றும் சொன்னார்.

அதற்கு தன்வார், ‘நான் பல முறை போன் செய்தும் சர்மா போனை எடுக்கவே இல்லை’ என்று பதிலுக்கு சொன்னார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தன்வார், ‘என்னை காலி செய்ய வேண்டும் என்று நினைத்தால், பேசாமல் சுட்டுத் தள்ளுங்கள்...’’ என்று ஆவேசமாக கூறினார். அதன்பிறகு அவரை குலாம் நபி ஆசாத் சமாதானப்படு்த்தினார். மேலும், மாநில தலைவர் தன்வாரை மாற்றுவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் மற்றவர்களிடம் கூறினார்.

தோற்றதற்கு பிறகும் ஹரியானா காங்கிரஸ் கட்சியினர் இன்னும் கோஷ்டிச் சண்டைதான் போடுகிறார்கள். ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே இல்லை.

இவ்வாறு அந்த எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது, முதலமைச்சராக இருந்த ஹூடா, சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, அவர் மீது ஊழல் வழக்குகளும் உள்ளன. இதனால் ஹூடா கோஷ்டிக்கு கட்சித் தலைமை ஆதரவு இருக்கிறது. இன்னொரு புறம், ஹூடா மீது மக்கள் அதிருப்தி குறையாததால், தன்வாரை மாற்றவும் காங்கிரஸ் தலைமை யோசிக்கிறது. இப்படியாக, ஹரியானாவிலும் குளறுபடிகளால் காங்கிரஸ் கரைந்து கொண்டிருக்கிறது.

You'r reading என்னை சுட்டுத் தள்ளுங்கள் காங்கிரஸ் தலைவர் ஆவேசம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளநீருக்கு ஒரு செயலி Niu Neer

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்