சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் பாயும் கவுன்டவுன் தொடங்கியது

Chandrayaan-2 will be launched from Sriharikota on July 15, Sunday at 2:51am. count down starts today

நாளை அதிகாலை விண்ணில் ஏவப்படும் சந்திரயான்-2 விண்கலத்திற்கான ஜிஎஸ்எல்வி ராக்கெட் கவுன்ட் டவுன் இன்று காலை தொடங்கியது.


நிலவில் தண்ணீர் இருக்கிறதா, மனிதன் வாழும் சூழல் உள்ளதா என்று ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2009ம் ஆண்டு அனுப்பியது. நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான அடையாளங்களை சந்திரயான்-1 கண்டுபிடித்தது. இதையடுத்து, நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது.


நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய லேண்டர், ரோவர் என்று அந்த விண்கலத்தில் 3 பெரிய கருவிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் அதிநவீன கேமராக்கள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஓராண்டு ஆய்வில் ஈடுபடக் கூடிய ஆர்பிட்டரின் எடை மட்டுமே 2.4 டன்னாகும். எனவே, மிக அதிக எடை கொண்ட விண்கலத்தை அனுப்பும் ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட்டில் சந்திரயான்-2 வி்ண்கலம் அனுப்பப்படுகிறது.


இந்த விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நாளை(ஜூலை 15) அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் இன்று (ஜூலை14) காலை 6.51 மணிக்கு தொடங்கியது.


இந்த விண்கலம் 50 நாட்கள் பயணம் செய்து, நிலவின் தெற்கு துருவத்தில் செப்டம்பர் 6 அல்லது 7ம் தேதி தரையிறங்கும். நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிவதற்கு இந்த விண்கலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும். மேலும், நிலவின் பரப்பு குறித்தும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது. நிலவின் தென்பகுதிக்கு உலகில் எந்த நாடும் விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் பாயும் கவுன்டவுன் தொடங்கியது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலககோப்பை பைனல் : இங்கி.,VS நியூசி., மல்லுக்கட்டு; முதல் முறை கோப்பை யாருக்கு ..?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்