ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்படுமா? சட்டசபையில் பாஜக தகவல்

BJP says Rajasthan government could fall Congress says pipe dream

ராஜஸ்தானில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று அம்மாநில சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் பேசினர். மற்றவர்களுக்கு நேர்மையைப் போதிக்கும் பாஜக, எதிர்க்கட்சி ஆட்சிகளை கவிழ்க்கும் வேலையில் இறங்குவதா? என்று அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.


ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் உள்ளார். சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க வேண்டுமென்று அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதனால், அசோக் கெலாட்டை கட்சிப் பொறுப்புக்கு அழைத்து கொள்ள தலைமை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ராகுல்காந்தி ராஜினாமா செய்து விட்டதால் கட்சித் தலைமையே உறுதியில்லாமல் உள்ளது.


இந்நிலையில், கர்நாடகாவைப் போல் ராஜஸ்தானிலும் ஆளும் காங்கிரசில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள் விலகலாம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான குலாப்சந்த் கட்டாரியா தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘கர்நாடகா, கோவாவைப் போல் அடுத்து ராஜஸ்தானிலும் நடக்கலாம். காரணம், காங்கிரஸ் கட்சிக்குள் கடும் சண்டை நடக்கிறது. எனவே, ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜ.க. பொறுப்பல்ல’’ என்று கூறினார்.
ராஜஸ்தான் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

சட்டசபையிலும் பாஜக எம்எல்ஏக்கள் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று உறுதியுடன் கூறினர். சட்டசபையில் பாஜக உறுப்பினர் அசோக் லகோத்தி பேசும் போது. ‘‘முதலமைச்சர் அசோக் கெலாட் கடந்த 10ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்தான், காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பட்ஜெட். காங்கிரசுக்குள் உட்கட்சி மோதல் அதிகமாக உள்ளது. முதலமைச்சர் அடிக்கடி டெல்லிக்கு போய் வருகிறார். விரைவில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்’’ என்றார். அதே போல், பாஜகவின் இன்னொரு உறுப்பினர் காளிசரண் பேசும் போது, ‘‘ஆட்சி கவிழ்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன’’ என்றார்.


இப்படி பாஜக எம்எல்ஏக்கள் வரிசயைாக பேசவும், காங்கிரஸ் அமைச்சர் பி.டி.கல்லா உள்பட அமைச்சர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் பதில் கொடுத்தனர். அமைச்சர் கல்லா பேசும் போது, ‘‘பாஜக மற்றவர்களுக்கு நேர்மையைப் போதிக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வரிசையாக ஆட்சிகளை கவிழ்த்து வருகிறது. ராஜஸ்தானில் அவர்களின் முயற்சி பலிக்காது. அது பகல் கனவாக இருக்கும்’’ என்றார். இதே போல், மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் பேசினர். பகுஜன்சமாஜ் உறுப்பினர் ராஜேந்திரகுடா பேசும் போது, ‘‘எங்கள் கட்சியின் 6 எம்எல்ஏக்களும் கடைசி வரை கெலாட்டுக்கு ஆதரவாகவே இருப்போம்’’ என்றார்.


ராஜஸ்தான் சட்டசபையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 200. காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 73 எம்எல்ஏக்களும் உள்ளனர். பகுஜன்சமாஜ் 6, சுயேச்சைகள் 12 என்று 18 பேர் தற்போது காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர்.
மெஜாரிட்டிக்கு 101 எம்எல்ஏக்கள் தேவை. எனவே, காங்கிரசில் இருந்து 20 எம்எல்ஏக்கள் வரை இழுத்தால்தான் ஆட்சியை கவிழ்க்க முடியும். கோவாவில் 10 எம்எல்ஏக்களையும், கர்நாடகாவில் 16 எம்எல்ஏக்களையும் வளைத்த பாஜக, இங்கே 20 எம்எல்ஏக்களை வளைக்காமல் விடுவார்களா? தெரியவில்லை.

You'r reading ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்படுமா? சட்டசபையில் பாஜக தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் பாயும்; கவுன்டவுன் தொடங்கியது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்