கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கன மழை ரெட் அலர்ட் எச்சரிக்கையால் அணைகள் திறப்பு

Heavy rain in Kerala, red alert issued and dams open in advance

கேரளாவில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்ப்பதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக அணைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


கேரளாவில் தென் மேற்கு பருவ மழை கடந்த ஜுன் முதல் வாரம் தொடங்கினாலும், கடந்த ஒன்றரை மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கேரளாவின் தென் மாவட்டங்களான இடுக்கி, பத்தனம்திட்டை, கொல்லம் மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.


கனமழையால் கேரளாவில் உள்ள பல ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆடி மாத பூஜைக்காக சபரிமலை திறக்கப் பட்டுள்ள நிலையில், பம்பை நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பம்பை நதியில் பக்தர்கள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கனமழையால் கேரளாவில் உள்ள அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.கடந்த ஆண்டும் இதே போல் பெய்த வரலாறு காணாத கனமழையால், மாநிலத்தின் 80 அணைகளும் வேகமாக நிரம்பி ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன. தொடர்ந்து மழையும் பெய்ததால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு
வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து கேரளா மீண்டெழ பல மாதங்கள் ஆனது.


இதனால் தற்போது பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிப்பதாலும், அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதாலும் அபாய கட்டத்தை எட்டியுள்ள அணைகளை முன்கூட்டியே திறக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.


இதையடுத்து, இடுக்கி மாவட்டம் கல்லார் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் இன்று காலை திறக்கப்பட்டது. முதற் கட்டமாக ஒரு ஷட்டர் மட்டும் திறக்கப்பட்டு, தொடர்ந்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று மற்ற அணைகளும் கண்காணிக்கப்பட்டு அடுத்தடுத்து திறந்து விட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பெரியாறு அணைக்கான நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதே போல் சீசன் தொடங்கியும் பல நாட்களாக வறண்டு கிடந்த குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விடுகிறது . இதனால் குற்றாலத்திற்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் கடந்த 2 நாட்களாக அதிகரித்துள்ளது.

குற்றாலத்தில் சாரல் தொடங்கியாச்சி.. குதூகல குளியலுக்கு தயாரா?

You'r reading கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கன மழை ரெட் அலர்ட் எச்சரிக்கையால் அணைகள் திறப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சொன்னதை செய்த பிரியங்கா; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்