எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் மங்களூருவில் திடீரென மாயம் காபிடே நிறுவனத்தை துவங்கியவர்

CCD owner, SM Krishnas son-in-law, Siddhartha goes missing near Mangaluru river

கபே காபிடே நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா, மங்களூருவில் இன்று காலை மாயமானார். அவர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார். இதையடுத்து, முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சென்று கிருஷ்ணாவிடம் விசாரித்தார்.

கபே காபிடே என்ற பிரபல நிறுவனத்தை கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா நடத்தி வருகிறார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் மாளவிகாவின் கணவர். பெங்களூருவில் இருந்து நேற்று காலை காரில் புறப்பட்டு சென்ற சித்தார்த்தா, மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் இறங்கிக் கொண்டார். நடைப்பயிற்சி செய்து விட்டு வருவதாக டிரைவரிடம் கூறி விட்டு அவர் சென்றார். அதன்பிறகு, நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை.

இது குறித்து போலீசாரிடம் டிரைவர் பசவராஜ் பாடீல் கூறியதாவது:

நான் நேற்று காலை 8 மணிக்கு பெங்களூருவில் உள்ள சித்தார்த்தா வீட்டுக்கு சென்றேன். பகல் 12.30 மணிக்கு அவர் காரை எடுக்கச் சொன்னார். காரில் அவர் ஏறியதும் சக்லேஸ்பூருக்கு போகச் சொன்னார். சக்லேஸ்பூரை நெருங்கிய சமயத்தில் திடீரென மங்களூருவுக்கு போகச் சொன்னார். நானும் காரை அவர் சொன்னபடியே ஓட்டிச் சென்றேன்.

மங்களூருவில் நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் காரை நிறுத்தச் சொன்னார். காரை விட்டு இறங்கிய அவர், வாக்கிங் போய் விட்டு வருவதாக கூறி என்னை அங்கேயே காத்திருக்கச் சொன்னார். நான் பாலத்தின் ஒரு முனையில் காத்திருந்தேன். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், அவரை தேடிப் பார்த்தேன். அவரது மகனுக்கும் போனில் தகவல் கொடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். தற்போது சித்தார்த்தாவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரை யாரும் கடத்திச் சென்று விட்டார்களா? வேறு ஏதேனும் முடிவுக்கு வந்திருப்பாரோ என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

நீண்ட காலம் காங்கிரசில் இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடக முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில்தான் அவர் பாஜகவில் சேர்ந்தார். எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் மாயமான தகவல் கேள்விப்பட்டதும், முதலமைச்சர் எடியூரப்பா இன்று காலை கிருஷ்ணாவின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்தார். காங்கிரஸ் தலைவர்களும் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

'இனி சபரிமலைக்கு பறக்கலாம்' மண்டல, மகர பூஜைக்கு 'ஏர் டாக்சி' சேவை அறிமுகம்

You'r reading எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் மங்களூருவில் திடீரென மாயம் காபிடே நிறுவனத்தை துவங்கியவர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரு லட்சம் கோடி சுவாகா? சிதம்பரம் மீது சாமி புகார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்