கர்நாடகா, கேரளாவில் கொட்டித் தீர்க்கிறது கன மழை காவிரியில் 55 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

Heavy rain Karnataka, Kerala water release in cauvery river to Tamilnadu increased

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கை மழையால் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் பெய்து வரும் கன மழையால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஒரே நாளில் 80 செ.மீ பெய்த வரலாறு காணாத மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் உள்ளது.


கேரளா மற்றும் கர்நாடகாவில் தென் மேற்குப் பருவமழை கடந்த ஜுன் முதல் வாரத்தில் தொடங்கினாலும், கடந்த 2 மாதங்களாக போதிய மழை இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இப்போது பருவ மழை தீவிரமாகியுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்ப்பதால், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வேகமாக நிரம்பி வருவதன் எதிரொலியாக காவிரியிலிருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று கபினியில் இருந்து 15 ஆயிரம் கன அடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி என மொத்தம் 21 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி நீரும் கேஆர்எஸ் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்வதால் கபினி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு காலை 9.30 மணிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.கர்நாடகாவில் உள்ள மற்ற அணைகளில் இருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர வாய்ப்புள்ளது.

கேரளாவிலும் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது என கேரள மாநில பேரிடர் மேலாண் அமைப்பு தெரிவித்து உள்ளது.

தீவிர கனமழையால் ரெட் அலெர்ட் விடப்பட்டது பகுதிகளில் தீவிர கனமழை முதல் மிக தீவிர கனமழை பெய்ய கூடும். இந்த அலெர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்ட பகுதிகளில் கனமழை முதல் தீவிர கனமழை பெய்ய கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.


தென் மேற்கு பருவ மழை தீவிரமானதால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.


நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களாக கொட்டித் தீர்க்கும் கன மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தொடர் கனமழையால் ஒரே நாளில் 82 செ.மீ. அளவுக்கு மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.


நேற்று முன்தினமும் அவலாஞ்சியில் 40 செ.மீ. மழை பெய்த நிலையில் நேற்றும் 82 செ.மீ. மழைப்பதிவாகியுள்ள நிலையில் இன்றும் கன மழை கொட்டி வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் நிரம்பும் கர்நாடக அணைகள்; காவிரியில் 8,300 க.அடி நீர் திறப்பு

You'r reading கர்நாடகா, கேரளாவில் கொட்டித் தீர்க்கிறது கன மழை காவிரியில் 55 ஆயிரம் கன அடி நீர் திறப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்