டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து நோயாளிகள் அவசரமாக வெளியேற்றம்

Major fire breaks out in Delhi AIIMS hospital, no casualties

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே ஏற்பட்ட தீ விபத்தால் முதல் மற்றும் 2-வது மாடியில் தீ பற்றி எரிந்தது .இதனால் முன்னெச்சரிக்கையாக நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் தளத்தில் அவசரச் சிகிச்சை பிரிவு அருகே உள்ள ஆய்வுக் கூடத்தில் இன்று மாலை 5 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. கரும்புகையுடன் கொழுந்து விட்டு எரிந்த தீ இரண்டாவது தளத்திற்கும் பரவியது. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உடனடியாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு துறையினர் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பின் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் ,இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. சோதனைக் கூடத்தில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கான காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த மருத்துவமனையில் தான் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவர் சிகிச்சை பெற்று வரும் கட்டிடம் வேறு பகுதியில் அமைந்துள்ளதால், தீ விபத்தால் அங்கு ஏதும் பாதிப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அருண் ஜெட்லியின் உடல்நிலையோ மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You'r reading டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து நோயாளிகள் அவசரமாக வெளியேற்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மன அழுத்தம், நன்மையா? தீமையா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்