ஓம், பசு என்ற வார்த்தைகளை கேட்டாலே 16ம் நூற்றாண்டா? எதிர்க்கட்சிகளுக்கு மோடி கேள்வி..

Some feel words cow and Om will take us back to 16th century: Modi

சிலருக்கு ஓம், பசு என்ற வார்த்தைகளை கேட்டாலே, ஏதோ 16ம், 17ம் நூற்றாண்டுக்கு போய் விடுவது போலவும், நாட்டை சீரழிப்பது போலவும் தோன்றுகிறது என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கிண்டலடித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரபிரதேச மாநிலம் மதுராவுக்கு சென்றார். அங்கு, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாடு திட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசின் நிதியுதவியுடன் 12 ஆயிரத்து 652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. கால்நடைகளுக்கு கால் மற்றும் வாயில் ஏற்படும் நோய்களை ஒழிப்பதே இத்திட்டம். இதன்படி, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும் போது, இப்போது சிலருக்கு ஓம், பசு என்ற வார்த்தைகளை கேட்டாலே, ஏதோ 16ம், 17ம் நூற்றாண்டுக்கு போய் விடுவது போலவும், நாட்டை சீரழிப்பது போலவும் தோன்றுகிறது. நான் ஆப்பிரிக்காவில் ருவாண்டா நாட்டிற்கு போயிருந்தேன். அங்கே ஒரு தனித்துவமான திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். அதாவது, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பசு கொடுக்கிறார்கள். அந்த பசு ஒரு பெண் கன்று ஈன்றதும் அதை அரசாங்கமே பெற்று வேறொரு குடும்பத்திற்கு கொடுக்கிறார்கள். எல்லா வீட்டிலும் பசு வளர்க்கப்பட வேண்டும் என்பதே திட்டம். நமது நாட்டிலும் பசு மாடுகள் இ்ல்லாமல் கிராமப் பொருளாதாரம் நீடிக்க முடியுமா? இதை நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.

பிரதமர் மோடி, அந்த விழாவுக்கு பின்பு, பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்தெடுக்கும் பெண் தொழிலாளர்களுடன் அமர்ந்து அவர்களின் பணியை பார்வையிட்டு உரையாடினார்.
அவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை பொதுமக்கள் கைவிட வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, கால்நடைகள், மீன்கள் ஆகியவற்றுக்கும் பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிப்பதாகவும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி. மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசினார். அவர் பேசுகையில், நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மலிவான பைகளை ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடி இன்று ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சிக்கு செல்கிறார். அங்கு புதிய சட்டசபை கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். அத்துடன், விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தையும், சுயதொழில் புரிவோருக்கான ஓய்வூதியத் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

You'r reading ஓம், பசு என்ற வார்த்தைகளை கேட்டாலே 16ம் நூற்றாண்டா? எதிர்க்கட்சிகளுக்கு மோடி கேள்வி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிவக்குமார் கைது எதிரொலி.. ஒக்கலிகர் இனத்தவர் போராட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்