திருப்பதி தேவஸ்தானம் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு பதவி

Andhra Pradesh government announced 24 members nominated to Tirupati Devasthanams board

திருப்பதி தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட 4 தமிழர்களுக்கு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார இந்து கோயில் என்றால், அது திருப்பதி ஏழுமலையான் கோயில்தான். இந்த கோயிலை திருமலா-திருப்பதி தேவஸ்தான போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த போர்டு உறுப்பினர் பதவி, ஆந்திராவில் மிகவும் கவுரவமான பதவியாக பார்க்கப்படும். அதிலும் சேர்மன் பதவி என்பது ஆந்திர கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானது.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும், திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் போர்டு கலைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த போர்டு சேர்மன் பதவியில் தனது தாய் வழி மாமாவான ஒய்.வி.சுப்பாரெட்டியை நியமித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பம் கிறிஸ்தவக் குடும்பம். சுப்பாரெட்டி மதம்மாறாமல் இந்துவாகவே இருப்பவர். ஆனாலும், சுப்பாரெட்டி கிறிஸ்துவர் என்றும் அவரை நியமிக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பி, சில நாட்களில் அது அடங்கி விட்டது.

இந்நிலையில், திருமலா-திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் போர்டுக்கு 24 உறுப்பினர்களை நியமித்து ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆந்திராவைச் சேர்ந்த 8 பேர், தெலங்கானாவின் 7 பேர், தமிழ்நாட்டின் 4 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் டெல்லி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலா ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா சிமென்ட்ஸ் தலைவர் என்.சீனிவாசன், உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, டாக்டர் நிசித்தா முப்பாவரப்பு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த குமரகுரு, எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர விசுவாசி. ஆந்திராவில் ஹெட்டெரோ குரூப் தலைவர் பார்த்தசாரதி ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.

காங்கிரஸ் பிரமுகர்கள் சிவக்குமார், புட்டா பிரதாப் ரெட்டி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரமணமூர்த்தி, மல்லிகார்ஜூன ரெட்டி, பார்த்தசாரதி ஆகியோர் அடங்குவர். தொழிலதிபர்கள் பார்த்தசாரதி ரெட்டியும், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனும், முதல்வர் ஜெகன்மோகன் மீதான சிபிஐ ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கர்நடாகாவில் இன்போசிஸ் சுதா மூர்த்தி, ரமேஷ் ஷெட்டி, சம்பத்ரவி நாராயணா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். டெல்லியில் இருந்து சிவசங்கரனும், மகாராஷ்டிராவில் இருந்து ராஜேஷ் சர்மாவும் இடம்பெற்றுள்ளனர்.

You'r reading திருப்பதி தேவஸ்தானம் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு பதவி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேற ஹீரோவ வச்சி படம் பண்ண சொன்னாரு விஜய் அண்ணா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்