பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் முகாம் அழிப்பு.. 10 பாக். வீரர்கள் சாவு

3 terror camps destroyed in pakistan occupied Kashmir

காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நுழைந்து 3 தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. அப்போது 6 முதல் 10 பாக்.வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து, மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பல்வேறு இயக்கத்தைச் சேர்ந்த 500 பேர் வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க முயன்ற பாகிஸ்தான் அதில் தோற்றுப் போனது. இதையடுத்து, காஷ்மீருக்குள் ஏதாவது குழப்பம் ஏற்படுத்த மறைமுகமாக முயன்று வருகிறது. கடந்த வாரம், காஷ்மீர் மாநிலம் டாங்தார் செக்டரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய வீரர்கள் 2 பேரும், சிவிலியன் ஒருவரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து, காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் படையினர் முயற்சி செய்தனர். இதனால், இந்திய ராணுவம் நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதிரடியாக நுழைந்து 3 தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. அப்போது நடந்த சண்டையில் 6 முதல் 10 பாகிஸ்தான் வீரர்களும், சில தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இத்தகவலை ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். தற்போது எல்லையில் உள்ள நிலவரம் குறித்து பிபின் ராவத்திடம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் விசாரித்தறிந்தார்.

You'r reading பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் முகாம் அழிப்பு.. 10 பாக். வீரர்கள் சாவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரசிகர்களுக்கு விருந்தாக பிகில் 7 நிமிட மேக்கிங் வீடியோ... தளபதி 63 லேட்டஸ்ட் அப்டெட்....

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்