பாஜகவுக்கு ஆதரவு.. காங்கிரஸ் அழைப்பை நிராகரித்த சுயேச்சைகள்

haryana independent MLAs supports bjp, rejects congress

அரியானாவில் பாஜகவுக்கு எதிராக வெற்றி பெற்ற அனைவரும் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வர வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஹுடா விடுத்த அழைப்பை சுயேச்சைகள் நிராகரித்தனர்.

அரியானா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. அதில் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபை ஏற்பட்டது. பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும், ஜனநாயக ஜனதா கட்சி(ஜேஜேபி) 10 இடங்களையும், லோக்தளம், அரியானா லோகித் கட்சி(எச்.எல்.பி) ஆகியவை தலா ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளன. இது தவிர 7 சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது பாஜக ஆட்சி அமைக்க மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவை. வெற்றி பெற்றுள்ள சுயேச்சைகளில் 5 பேர் பாஜகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிட்டவர்கள். எனவே, அவர்களையும் மற்ற 2 சுயேச்சைகளையும் வளைத்தாலே பாஜக ஆட்சி அமைத்து விடலாம்.

இருந்தாலும், மதில் மேல் பூனை போல் இல்லாமல் உறுதியான ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், ஜனநாயக ஜனதாவின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். இதில் எதை பாஜக தேர்வு செய்யப் போகிறது என்று தெரியவில்லை.
இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹுடா, தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே ஒரு அழைப்பு விடுத்தார். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் எல்லாம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க முன்வர வேண்டும் என்றார்.

அவர் கூறுகையில், மக்கள், முதல்வர் கட்டார் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக வாக்களித்து உள்ளனர். எனவே, ஐஎன்எல்டி, ஜேஜேபி, காங்கிரஸ், சுயேட்சைகள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு வலுவான அரசை அமைக்க வேண்டும் என்று சொல்லிப் பார்த்தார்.

இந்த நிலையில், பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, அரியானாவில் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று ட்விட்டரில் தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து, காங்கிரசுடன் கைகோர்த்தால் அது கர்நாடகாவின் குமாரசாமி ஆட்சி கதையாக முடிந்து விடும் என்பதால், பாஜக பக்கமே சாய்வது என்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் நினைக்கிறார்கள். அதனால், கட்டார் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

எச்.எல்.டி கட்சி எம்.எல்.ஏ. கோபால் காந்தாவின் சகோதரர் கோபிந்த் காந்தா, என்னிடம் மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

கோபால் காந்தா, சிர்சா சுனிதா (துக்கலைச் சேர்ந்த பாஜக எம்.பி.), ரஞ்சித்சிங் (சுயேட்சை எம்.எல்.ஏ) ஆகியோர் டெல்லிக்கு சென்று பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், எப்படியாவது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற ஹுடாவின் கனவு தகர்ந்து விட்டது.

You'r reading பாஜகவுக்கு ஆதரவு.. காங்கிரஸ் அழைப்பை நிராகரித்த சுயேச்சைகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓசூர், கிருஷ்ணகிரியில் விஜய் மன்றத்தினர் அராஜகம்.. வன்முறை.. பிகில் காட்சிகள் ரத்து..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்