சபாஷ்! பாதாளச் சாக்கடையை மனிதன் அள்ளுவதற்கு முடிவு கட்டிய கேரளம்

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில், நாட்டிலேயே முதல்முறையாக, ரோபோ இயந்திரங்களை அறிமுகம் செய்துள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில், நாட்டிலேயே முதல்முறையாக, ‘ரோபோ’ இயந்திரங்களை அறிமுகம் செய்துள்ளது.

‘பெருச்சாளி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ‘ரோபோ’ இயந்திரங்கள்தான் மார்ச் 2 முதல் கேரளத்தில் பாதாளச் சாக்கடை பணிகளை மேற்கொள்ளப் போகின்றன. நித்தமும் செத்துப் பிழைக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் உயிர், இனியும் மலிவாக இருக்க முடியாது என்ற மிக முக்கியமான அறிவிப்பை இதன்மூலம் கேரளா அரசு இந்தியாவுக்கு செய்துள்ளது.

கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு பதவியேற்றது முதல் சமூகநீதி சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில், கேரளத்தில் உள்ள பொதுக்கோயில்களில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் வரலாற்று முன்னெடுப்பை நிகழ்த்திக் காட்டியது. இது நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது, அந்த வரிசையில் பாதாளச் சாக்கடைகளுக்குள் மனிதர்களை இறக்கும் அவலத்திற்கு கேரள அரசு முடிவு கட்டியுள்ளது. கேரளத்தில் 9 இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று, பாதாளச் சாக்கடை பணிகளுக்கான ‘ரோபோ’ இயந்திரத்தை வடிவமைக்கும் பணியில் சில மாதங்களுக்கு முன்பு ஈடுபட்டது.

இது முதல்வர் பினராயி விஜயன் கவனத்திற்கு வந்தது. அப்போது, அந்தக் குழுவின் முயற்சியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று, ஊக்கப்படுத்திய முதல்வர் பினராயி விஜயன், கேரள அரசின் நீர் வாரியம் மூலம் முழுமையான நிதி உதவியையும் ‘ரோபோ’ தயாரிப்புக்கு வழங்குவதாக அறிவித்தார்.

இதன்காரணமாக, கேரளாவில் உள்ள ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான ‘ஜென்ரோபாட்டிக்ஸ், மிகுந்த உற்சாகத்துடன், ‘ரோபோ’ இயந்திர உருவாக்கத்தில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றது. தாங்கள் தயாரித்த ‘ரோபோ’ இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து, தனது ரோபோவுக்கு ‘பெருச்சாளி’ என்ற பெயரையும் சூட்டியது.

இது குறித்து கூறியுள்ள ‘ஜென்ரோபோட்டிக்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் விமல் கோவிந்த், “எந்த விதமான பாதாளச் சாக்கடையிலும் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், இந்த ரோபோ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோவை ‘வை-பை’, ‘புளூடூத்’, மற்றும் ‘கண்ட்ரோல் பேனல்’ ஆகியவற்றின் மூலம் இயக்க முடியும்; இதில் உள்ள பக்கெட் போன்ற அமைப்பும், துடுப்பு போன்ற அமைப்பும், கழிவுகளை எளிதாக அள்ளி, சுத்தம் செய்யும் என்கிறார்.

You'r reading சபாஷ்! பாதாளச் சாக்கடையை மனிதன் அள்ளுவதற்கு முடிவு கட்டிய கேரளம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொடர் வீழ்ச்சியில் இந்திய ரூபாய் மதிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்