சீனாவில் இருந்து வாங்கு.. ராகுல் கடும் விமர்சனம்

Rahul Gandhi attacks Centre on RCEP BJP hits back

இந்தியாவில் உற்பத்தி என்பது இப்போது சீனாவில் இருந்து வாங்கு என்று மாறி விட்டது என மத்திய அரசை ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில் பிராந்திய விரிவான பொருளாதார ஒப்பந்தம்(ஆர்.சி.இ.பி.) தொடர்பான ஏசியான்-இந்தியா மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், 10 ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா, சீனா உள்பட 6 நாடுகள் பங்கேற்றன.

ஆர்.சி.இ.பி. என்பது இந்த நாடுகள் இடையே தடையற்ற வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தம். இதன்மூலம், எந்த தடையுமின்றி இந்த நாடுகளில் ஏற்றுமதி செய்யலாம்.
ஏற்கனவே சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் ஏராளமான பொருட்கள் இறக்குமதியாவதால், இந்திய சிறுகுறு நடுத்தரத் தொழில்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால், ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என்று இந்திய வர்த்தகர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இதன்படி, பிரதமர் மோடியும் அந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என்று நேற்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று கருதிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதில் அவர், இந்தியாவில் உற்பத்தி(மேக் இன் இந்தியா) என்பது இப்போது சீனாவில் இருந்து வாங்கு(பை பிரம் சீனா) என்று மாறி வருகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு இந்தியனும் சராசரியாக ரூ.6 ஆயிரத்திற்கு சீனா பொருட்களை வாங்குகிறார்கள். கடந்த 2014ம் ஆண்டில் இருந்த சீனா பொருட்கள் இறக்குமதியை விட இப்போது 100 சதவீதம் அதிகமாகியுள்ளது.

ஆர்.சி.இ.பி. மூலம் சீனாவில் இருந்து மலிவு விலை பொருட்கள், இந்தியாவுக்குள் தாராளமாக வந்து விடும். அதன்மூலம், வேலைவாய்ப்புகள் பறிபோகும். நாட்டின் பொருளாதாரம் அழிந்து விடும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜக தரப்பில் உடனடியாக பதில் தரப்பட்டது. பாஜக ட்விட்டரில், ராகுல்காந்திக்கு தியானத்திற்கு போய் வந்ததும் ஆர்.சி.இ.பி பற்றி நினைவு வந்து விட்டது. கடந்த 2012ம் ஆண்டில் ஐ.மு.கூட்டணி ஆட்சியில்தான், ஆர்.சி.இ.பி. ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கின. 2005ம் ஆண்டில் சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறை 1.9 பில்லியன் டாலராக இருந்தது 2014ல் 44.8 பில்லியனாக 23 மடங்கு உயர்ந்து விட்டது. நீங்கள் செய்த தவறுகளை பிரதமர் மோடி சரி செய்து வருகிறார் என்று கூறியுள்ளது.

You'r reading சீனாவில் இருந்து வாங்கு.. ராகுல் கடும் விமர்சனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நீட் தேர்வை திரும்ப பெறலாமே? நீதிபதிகள் கேள்வி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்