சிவசேனாவுக்கு ஆதரவா? காங்கிரஸ், என்.சி.பி. தீவிர ஆலோசனை..

Congress, NCP go into huddle over support for Shiv Sena in Maharashtra

சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பதா, அல்லது அதனுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதா என்று தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன. இவற்றின் முடிவைப் பொறுத்து, மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்திற்கு இன்று மாலைக்குள் முடிவு தெரியும்.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்று சிவசேனா பிடிவாதமாக கேட்டது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து விட்டது.

இந்த இழுபறியில், பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் பட்நாவிஸை பதவியேற்க வருமாறு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். அவர் கவர்னரை சந்தித்து பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார். இதன்பின், 2வது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். அதே சமயம், இன்று இரவு 7.30 மணி வரைதான் கவர்னர் அவகாசம் அளித்திருக்கிறார்.

இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி) கட்சிகள் தங்கள் முடிவை வேகமாக அறிவிக்க வேண்டுமென்று சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மேலும், பாஜகவுக்கு 78 மணி நேரம் அவகாசம் அளித்த கவர்னர் கோஷ்யாரி, சிவசேனாவுக்கு 24 மணி நேரம் மட்டுமே அவகாசம் அளித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மும்பையில் என்.சி.பி. கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம், மும்பையில் தொடங்கியுள்ளது. இதில் கட்சித் தலைவர் சரத்பவார், அஜித்பவார், சுப்ரியா சுலே உள்ளிட்ட மூத்த தலைவர்களும், முக்கிய எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றுள்ளனர்.
இதே போல், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் காங்கிரஸ் செயற்குழு கூடியிருக்கிறது. இதில், மூத்த தலைவர்கள் அகமது படேல், கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டசபையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 288. இதில், 145 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மெஜாரிட்டி கிடைக்கும். தற்போது சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 என்று உறுப்பினர்களை கொண்டுள்ளன. எனவே மூன்று கட்சிகளும் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தினால், மெஜாரிட்டி அரசாக அமையும். மேலும், பாஜகவை தனிமைப்படுத்தி மகாராஷ்டிர அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

அதே சமயம், சிவசேனாவும், பாஜகவும் முழுக்க இந்துத்துவா கொள்கையை கொண்டவை. அந்த 2 கட்சிகளும் 30 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தன. காங்கிரசும், என்.சி.பி.யும் மதசார்பற்ற கொள்கை உடையவை. இவற்றுடன் சிவசேனா கூட்டணி சேர்ந்தால் எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும் என்பது கேள்விக்குறியே!

You'r reading சிவசேனாவுக்கு ஆதரவா? காங்கிரஸ், என்.சி.பி. தீவிர ஆலோசனை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவியேற்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்