முதல்வர், சபாநாயகர் பதவி.. சிவசேனாவுக்கு நிபந்தனை.. என்.சி.பி-காங்கிரஸ் பேரம்

NCP may demand sharing CM post in Maharashtra, Congress eyes speakers chair

மகாராஷ்டிராவில் சிவசேனாவிடம் தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி.) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. முதல்வர், சபாநாயகர் பதவிகளை அக்கட்சிகள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போது பாஜக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து விட்டது.

சிவசேனாவோ முதல்வர் பதவி கேட்டு பிடிவாதம் செய்தது. இந்த இழுபறியில், பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் பட்நாவிஸை பதவியேற்க வருமாறு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். அவர் கவர்னரை சந்தித்து பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார்.

இதன்பின், 2வது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். சிவசேனா ஆட்சியமைக்க முன் வருவதாக கூறி விட்டு, என்சிபி மற்றும் காங்கிரசின் ஆதரவு கடிதம் பெற்று வர 3 நாள் அவகாசம் கேட்டது. ஆனால், அதற்கு கவர்னர் மறுப்பு தெரிவித்தார். பின்னர், தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். அதன்பிறகு ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்தார். அதன்படி ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணியிடம் சிவசேனா தலைவர்கள் ரகசிய பேச்சுவார்தையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மும்பை வந்து சரத்பவாரை சந்தித்து பேசினர். இதில், சிவசேனாவிடம் எப்படி ஒப்பந்தம் செய்வது என விவாதிக்கப்பட்டது.

தற்போது சிவசேனாவிடம் 56, என்.சி.பி 54, காங்கிரஸ் 44 என்று எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை தங்களுக்கு தர வேண்டுமென்று என்.சி.பி. கேட்டுள்ளது. அதே போல், சபாநாயகர் பதவியை காங்கிரஸ் கேட்கிறது. இது தவிர, குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கவும் இரு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இவற்றுக்கு சிவசேனா ஒப்புக் கொண்டால் விரைவில் இந்த கூட்டணி ஆட்சி அமையலாம்.
இதற்கிடையே பாஜக என்ன செய்யும்? எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் வேலை நடைபெறுமா? அமித்ஷா தலையீட்டில் சிவசேனாவை வழிக்கு கொண்டு வருவார்களா என்பது தெரியவில்லை.

You'r reading முதல்வர், சபாநாயகர் பதவி.. சிவசேனாவுக்கு நிபந்தனை.. என்.சி.பி-காங்கிரஸ் பேரம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்