மோடியின் வெளிநாட்டு டூர்களுக்கு விமானசெலவு மட்டும் ரூ.255 கோடி.. மத்திய அமைச்சர் தகவல்

Over Rs 255 Crore Spent On PM Narendra Modis Foreign Trips In Past Three Years

கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதில், விமானச் செலவு மட்டுமே ரூ255 கோடி ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு தனிவிமானத்தில் செல்கிறார். அந்த விமானச் செலவுகளை மத்திய அரசு ஏற்று கொள்கிறது. கடந்த 2016-17ம் ஆண்டில் பிரதமரின் வெளிநாட்டு டூர்களுக்கு விமானச் செலவு ரூ.76.27 கோடி, 2017-18ல் விமானச் செலவு ரூ.99.32 கோடி, 2018-19ல் விமானச் செலவு ரூ.79.91 கோடி என்று 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.255.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மேலும், 2016-17ல் பிரதமரின் வெளிநாட்டு டூர்களின் போது ஹாட்லைன் செலவு 2 கோடியே 24 லட்சத்து 75,451 ரூபாய். அதுவே 2017-18ல் 58 லட்சத்து 6630 ரூபாய் ஏற்பட்டுள்ளது. பிரதமரின் உள்நாட்டு பயணங்களுக்கு விமானப்படை விமானங்கள் அல்லது ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கட்டணம் கிடையாது.

பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை 7 வெளிநாடு டூர் சென்றிருக்கிறார். இந்த டூர்களில் பூடான், பிரான்ஸ், யு.ஏ.இ, பஹ்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, சவுதி, தாய்லாந்து, பிரேசில் ஆகிய 9 நாடுகளுக்கு சென்றிருக்கிறார்.

அமெரிக்காவின் ஹுஸ்டனில் நடத்தப்பட்ட ஹவ்டி மோடி நிகழ்ச்சியை அங்குள்ள டெக்சாஸ் இந்தியா அமைப்புதான் நடத்தியது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஆகஸ்ட் முதல் இது வரை 3 வெளிநாடு டூராக 7 நாடுகளுக்கு சென்றிருக்கிறார். துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு 3 முறைகளில் 6 நாடுகளுக்கு சென்றுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் 13 டிரிப்களில் 16 நாடுகளுக்கும், இணையமைச்சர் முரளிதரன் 10 டிரிப்களில் 16 நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் முரளீதரன் தெரிவித்திருக்கிறார்.

You'r reading மோடியின் வெளிநாட்டு டூர்களுக்கு விமானசெலவு மட்டும் ரூ.255 கோடி.. மத்திய அமைச்சர் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முஸ்லிம் தம்பதி பிரச்னைக்கு இந்து திருமண சட்டத்தில் தீர்வு.. நீதிபதிக்கு ஐகோர்ட் கண்டனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்