பட்நாவிஸ் அரசு பிழைக்குமா? சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு..

Supreme court Order on Fadnavis to face floor test tomorrow

மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 56 எம்.எல்.ஏ.க்களை வென்றிருந்த சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை கேட்டது. தேர்தல் உடன்பாட்டின் போதே இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு தருவதாக பாஜக ஒப்புக் கொண்டிருந்ததாகவும் கூறியது.

ஆனால், இதை பாஜக மறுத்தது. 105 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வர் என்று அறிவித்தது. இதை சிவசேனா ஏற்காததால் கூட்டணி முறிந்தது. இதன்பின், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயன்றது. மூன்று கட்சிகளும் 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று முடிவு செய்தன. இதை கடந்த 22ம் தேதி மாலையில் என்.சி.பி. தலைவர் சரத்பவார் அறிவித்தார்.

ஆனால், மறுநாள் 23ம் தேதி அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். என்.சி.பி. கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

அதற்கு பிறகு அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தங்கள் கூட்டணியில் மாற்றமில்லை என்றனர். மேலும், என்.சி.பி. கட்சியின் 48 எம்.எல்.ஏ.க்கள் சரத்பவாரிடம் உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், கவர்னரின் செயலை எதிர்த்து சிவசேனா, என்.சி.பி. மற்றும் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஞாயிறன்று(நவ.24) அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ்கன்னா ஆகியோர் வழக்கை விசாரித்தனர். அதன்பிறகு, தனக்கு மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக முதலமைச்சர் பட்நாவிஸ் கொடுத்த ஆதரவு கடிதத்தையும், கவர்னர் அவருக்கு பதவியேற்க விடுத்த அழைப்பு கடிதத்தையும் இன்று(நவ.25) தாக்கல் செய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்திருந்தனர்.

இந்த பரபரப்பான வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் சீனியர் வக்கீல் ஆஜரான அபிேஷக் சிங்வி, பட்நாவிஸ் அரசுக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்றால், ஏன் அவர்கள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க பயப்பட வேண்டும்? நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.

கவர்னரின் சார்பில் ெசாலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடும் போது, பட்நாவிஸ் ஆட்சியமைக்க உரிமை கோரியதையும், கவர்னர் அவரை அழைத்ததையும் நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஒரு வாரமாவது அவகாசம் தரப்பட வேண்டும் என்றார்.

அஜித்பவாரின் சார்பில் வக்கீல் மணீந்தர்சிங் வாதாடும் போது, என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் குழு தலைவர் என்ற அடிப்படையில் பட்நாவிஸ் அரசுக்கு ஆதரவை தெரிவிப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அஜித்பவாருக்கு உள்ளது என்று வாதாடினார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை நாளை(நவ.26) காலை அளிப்பதாக கூறியுள்ளனர்.

You'r reading பட்நாவிஸ் அரசு பிழைக்குமா? சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினி, கமலுடன் நடிப்பது எப்போது? தமன்னா வெளியிட்ட ஆசை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்