ஜனநாயகத்தை காப்பாற்றிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.. சரத்பவார் மகிழ்ச்சி

SC upheld democratic values, says Sharad Pawar

மகாராஷ்டிரா வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, ஜனநாயக மாண்புகளையும், அரசியல் சட்ட நெறிமுறைகளையும் உறுதி செய்துள்ளது என்று சரத்பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 56 எம்.எல்.ஏ.க்களை வென்றிருந்த சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை கேட்டது. 105 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வர் என்று பாஜக அறிவித்தது. இதனால், கூட்டணி முறிந்தது.

இதன்பின், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயன்றது. மூன்று கட்சிகளும் 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று முடிவு செய்தன. இதை கடந்த 22ம் தேதி மாலையில் என்.சி.பி. தலைவர் சரத்பவார் அறிவித்தார்.

ஆனால், மறுநாள் 23ம் தேதி அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். என்.சி.பி. கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

அதற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தங்கள் கூட்டணியில் மாற்றமில்லை என்றனர். மேலும், மும்பையில் தங்கள் கூட்டணியில் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளதாக கூறி ஓட்டலில் அணிவகுப்பு நடத்தினர்.

இதற்கிடையே, சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, அம்மாநில சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்கு பட்நாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்றும், அதை தொலைக்காட்சியில் நேரலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

மேலும், குதிரைப்பேரத்தை தடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் ஜனநாயக மாண்புகளை காப்பாற்ற முடியும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்புக்கு சரத்பவார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஜனநாயக மாண்புகளை, அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளையும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்்துள்ளதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்காருக்கு புகழ் சூட்டுவது போல், அரசியல் சட்ட நாளில் இந்த தீர்ப்பு வெளிவந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

You'r reading ஜனநாயகத்தை காப்பாற்றிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.. சரத்பவார் மகிழ்ச்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிவசேனா, என்சிபி கூட்டணிக்கு தலைவர் இன்று மாலை தேர்வு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்