கோத்தபய ராஜபக்சே இன்று மாலை வருகை.. மோடியுடன் சந்திப்பு..

SriLanka President Gotabaya Rajapaksa to Arrive in India for Visit on Thursday

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 2 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். ராஜபக்சே குடும்பத்தினர் சீனாவுக்கு நெருக்கமானவர்கள் என்றும், கோத்தபய ராஜபக்சே அதிபரானதால், இலங்கை இனி சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் என்றும் பரவலாக பேசப்பட்டது.

இதற்கிடையே, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு சென்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடியின் சார்பில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைக்கும் பிரதமர் மோடியின் அழைப்பு கடிதத்தையும் அளித்தார்.

இதை ஏற்ற கோத்தபய ராஜபக்சே, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். இன்று மாலையில் டெல்லி வந்து சேரும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கு பின்னர், இலங்கை அதிபர் கோத்தபய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும், பிரதமர் மோடியையும் தனித்தனியே சந்தித்து பேசுகிறார்.

பிரதமருடன் நடக்கும் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள், தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் பிரச்னைகள், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாள் பயணமாக வந்துள்ள கோத்தபய ராஜபக்சே நாளை நாடு திரும்புவார்.

இதற்கிடையே, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் அந்நாட்டு ராணுவம் நடத்திய இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது கோத்தபய ராஜபக்சே இலங்கையின் ராணுவச் செயலாளராக இருந்தவர். அதனால் அவர் மீதும் போர்க் குற்றங்கள் புரிந்ததாக சர்வதேச அரங்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

You'r reading கோத்தபய ராஜபக்சே இன்று மாலை வருகை.. மோடியுடன் சந்திப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சோனியா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு விலக்கப்படவில்லை.. மக்களவையில் அமித்ஷா விளக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்