பிரக்யா தாக்குர் பேச்சு.. அவைக் குறிப்பில் நீக்கம்.. காங்கிரஸ் வெளிநடப்பு

Pragya Thakur speech has been expunged from record, says Lok Sabha Speaker Om Birla

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் பேசியது, அவைக் குறிப்பில் இடம் பெறவில்லை என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். எனினும், அது பற்றி விவாதிக்க அனுமதிக்காததால், காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நேற்று(நவ.27) தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, பிரதமருக்கு மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்படும். முன்னாள் பிரதமர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும்.

இந்த மசோதாவின் மீது திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக சிறப்பு பாதுகாப்பை விலக்கிக் கொள்ளக் கூடாது. ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னர் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பை விலக்கியது தவறு. மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் நாதுராம் கோட்சே, 32 ஆண்டுகளாக காந்தி மீது ஆத்திரம் கொண்டிருந்ததாக கூறியிருந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட மதக் கொள்கையை கடைபிடிப்பவர். அதனால், அவர் தனது விரோதத்தை பல ஆண்டுகளாக வைத்திருந்தார்... என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, பாஜக உறுப்பினரான சாது பிரக்யா தாக்குர் குறுக்கிட்டு, நீங்கள் ஒரு தேசபக்தரை(நாதுராம் கோட்சே) உதாரணமாக சொல்லக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். உடனே, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, பிரக்யா தாக்குர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு, பாஜக உறுப்பினர்கள், பிரக்யாவை அமைதிப்படுத்தி உட்கார வைத்தனர்.

இந்நிலையில், மக்களவையில் இன்று இந்த விவகாரம் வெடித்தது. மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுந்து, காங்கிரஸ் கட்சியை பயங்கரவாத கட்சி என்று பிரக்யா பேசியிருக்கிறார். இந்த கட்சியில் இருந்துதான் ஆயிரக்கணக்கான தலைவர்கள் இந்த நாட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்டார்கள். ஆனால், இந்த கட்சியை இப்படி மோசமாக பாஜக உறுப்பினர் பேசுகிறார். காந்தியை கொன்றவரை தேசபக்தர் என்றும் ெசால்கிறார். நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இதற்கும் இந்த அவை அமைதி காக்க வேண்டுமா? இந்த விவகாரத்தை இப்போதே பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
அதற்கு சபாநாயகர் பிர்லா, பிரக்யா பேசியது அவைக் குறிப்பில் இருந்து அப்போதே நீக்கப்பட்டு விட்டது. அவைக் குறிப்பில் இடம் பெறாதவை பற்றி எப்படி விவாதிக்க அனுமதிக்க முடியும்? என்று அனுமதி மறுத்தார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கை முன்பாக வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து, யாரோ ஒருவர், கோட்சேவை தேசபக்தர் என்று கருதினால், எங்கள் கட்சி கண்டிப்பாக அதை கண்டிக்கும். காந்திதான் எங்களுக்கு தலைவர். இந்த நாட்டில் அவர் ஏற்றி வைத்த விளக்கு என்றும் அணையாமல் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

ஆனால், பிரக்யா பேச்சை கண்டித்து விவாதம் நடத்த அனுமதிக்காததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

You'r reading பிரக்யா தாக்குர் பேச்சு.. அவைக் குறிப்பில் நீக்கம்.. காங்கிரஸ் வெளிநடப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரக்யா சர்ச்சை பேச்சு.. பின்வாங்கிய பாஜக.. குழுவில் இருந்து நீக்கம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்