கட்சி தாவியவர்களுக்கு நிச்சயம் மந்திரி பதவி.. எடியூரப்பா உறுதி..

Yediyurappa said disqualified rebels will be given minister post

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு, பாஜகவுக்கு தாவியவர்களுக்கு நிச்சயம் மந்திரி பதவி தரப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடகாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்ற போதும் ஆட்சியமைக்க முடியவில்லை. இதையடுத்து, 2வது இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ம.ஜ.த. தலைவர் குமாரசாமிக்கு முதல்வர் பதவி அளித்தது.

இதன்பின், காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக உருவெடுத்தனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார், அந்த ராஜினாமாவை ஏற்காமல், அவர்களை எம்.எல்.ஏ.பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தார். ஆனாலும், மெஜாரிட்டியை இழந்த குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் பாஜகவில் சேர்ந்தார்கள்.

இதற்கிடையே, காலியான 17 சட்டமன்றத் தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. ராஜராஜேஸ்வரி நகர், மாஸ்கி ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் முறைகேடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடக்கவில்லை.

கட்சி தாவி பாஜகவில் சேர்ந்த 13 பேருக்கு பாஜக சீட் கொடுத்தது. 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிக்கை நேற்று(டிச.9) நடந்தது. இதில், 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 2 தொகுதிகளில் காங்கிரசும், ஒரு தொகுதியில் சுயேச்சையும் வெற்றி பெற்றது. கட்சி தாவி போட்டியிட்ட 13 பேரில் 2 பேர் தோற்றனர்.

காங்கிரசில் இருந்து வந்த நாகராஜ், ஹாஸ்கோடே தொகுதியில் பாஜக அதிருப்தி வேட்பாளர் சரத்பச்சேகவுடாவிடம் தோற்றார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய விஸ்வநாத், காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத்திடம் தோற்றார்.
முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் இருந்தது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு மொத்தமாக 101 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

எனவே, இந்த 15 தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தற்போது 12 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளதால், 76 வயது எடியூரப்பா பலமான முதலமைச்சராகி விட்டார்.
ஏற்கனவே அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் 75 வயதை கடந்தவர் என்ற முறையில் பாஜகவில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில், கட்சி தாவி வந்து வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் நாங்கள் ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி மந்திரி பதவி தரப்படும் என்றார்.

You'r reading கட்சி தாவியவர்களுக்கு நிச்சயம் மந்திரி பதவி.. எடியூரப்பா உறுதி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அயோத்தி வழககில் 40 சமூக ஆர்வலர்கள் சீராய்வு மனு தாக்கல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்