கோத்ரா ரயில் எரிப்புக்கு பின் நடந்த கலவரங்கள்.. நானாவதி கமிஷன் அறிக்கை வெளியீடு...

Nanavati-Mehta Commission has given clean chit given to Narendra Modi led Gujarat Govt

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டில் நடந்த கலவரங்கள், தூண்டிவிடப்பட்டதல்ல என்றும், அப்போதைய மோடி அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டில் அயோத்தியில் கரசேவைக்கு சென்ற பக்தர்கள், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் திரும்பிக் கொண்டிருந்தனர். கோத்ரா ரயில் நிலையம் அருகே ஒரு கும்பல் அந்த ரயிலுக்கு தீ வைத்தது. இதில், 59 ராமபக்தர்கள் உடல் கருகி இறந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் கலவரங்கள் வெடித்தன. இந்து, முஸ்லீம் மோதலில் சுமார் 2 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். 750 முஸ்லீம்கள், 254 இந்துக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதாக கூறப்பட்டது. அந்த கலவரத்தை அப்போதைய மோடி அரசாங்கமே தூண்டிவிட்டதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி நானாவதி, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அக்‌ஷய் மேத்தா ஆகியோர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அளித்த அறிக்கையில் கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிட்ட சதி என்று கூறப்பட்டது. இந்த அறிக்கை கடந்த 2008ம் ஆண்டு அரசிடம் அளிக்கப்பட்டது.

இதன் பின்னர், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற கலவரங்கள் குறித்து நானாவதி-மேத்தா கமிஷன் விசாரணை நடத்தி வந்தது.
பெரும்பாலும் சிறுபான்மையினர் கொல்லப்பட்ட அந்த கலவரத்தின் விசாரணை சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்றது. விசாரணை கமிஷனுக்கு 24 முறை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டது.

அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, அவரது அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், மற்றும் சில இயக்கங்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டது.
இதன்பின்னர், விசாரணை அறிக்கையை கடந்த 2014ம் ஆண்டில் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேலிடம் நீதிபதி நானாவதி கமிஷன் சமர்பித்தது. சுமார் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த விசாரணை கமிஷன் இறுதி அறிக்கை, குஜராத் மாநில சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள், தூண்டிவிடப்பட்டவை அல்ல என்றும், கலவரங்களுக்கும் அப்போதைய மோடி அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

You'r reading கோத்ரா ரயில் எரிப்புக்கு பின் நடந்த கலவரங்கள்.. நானாவதி கமிஷன் அறிக்கை வெளியீடு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் குரலை ஒலிக்கின்றன - பிரதமர் மோடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்