ரேப் இன் இந்தியா.. ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு.. பாஜக எம்.பி.க்கள் அமளி

Chaos in Parliament over Rahul Gandhis rape in India remark

ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோரி, நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா என்று சொன்னார். ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது? ரேப் இன் இந்தியா என்று ஆகி விட்டது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அதற்கு பிறகு அந்த பெண் விபத்தில் சிக்கினார். இந்த சம்பவத்தைப் பற்றி பிரதமர் வாயே திறக்கவில்லை.. என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னையை பாஜக கையில் எடுத்து கொண்டது. மக்களவையில் அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த பிரச்னையை கிளப்பி ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்தார். ராகுல்காந்தி எப்படி, ரேப் இன் இந்தியா என்று சொல்லலாம்? இந்தியாவில் எல்லோரையும் ரேப் பண்ணச் சொல்லுகிறாரா? இந்திய பெண்களை அவ்வளவு மட்டமாக நினைக்கிறாரா? வரலாற்றில் இப்படியொரு தலைவர் பேசுவது இதுதான் முதல்முறை. அவர் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்மிருதி இரானி கூறினார்.

இதே போல், அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் இதே போல் பேசினார். திமுக உறுப்பினர் கனிமொழி பேசும் போது, பிரதமர் மேக் இன் இந்தியா என்று சொன்னார். அதை நாம் மதிக்கிறோம். ஆனால், இப்போது நாட்டில் என்ன நடக்கிறது? துரதிருஷ்டவசமாக மேக் இன் இந்தியா நடக்கவில்லை. பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதுதான் நடக்கிறது. அதைத்தான் ராகுல்காந்தி பேசினார். அதில் என்ன தவறு இருக்கிறது? என்ற கேள்வி எழுப்பினார்.

ஆனால், பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், பகல் 12 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதே போல், மாநிலங்களவையிலும் பாஜக உறுப்பினர்கள், அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பாக வந்து அமளியில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அப்போது அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்த அவையில் இல்லாதவரை(ராகுல்) பற்றி பிரச்னை எழுப்பக் கூடாது என்று கண்டித்தார். ஆனாலும், பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

You'r reading ரேப் இன் இந்தியா.. ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு.. பாஜக எம்.பி.க்கள் அமளி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமைச்சர் வேலுமணி ஆயிரம் கோடிக்கு எம்.சாண்ட் ஊழல்.. ஸ்டாலின் திடுக் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்