குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு.. கேரளாவில் ஒரே மேடையில் கம்யூ., காங்கிரஸ் கைகோர்ப்பு..

Kerala govt, Oppn speak with one voice at anti-CAA protest

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் பினராயிவிஜயனும், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் ஒரே பந்தலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம், முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்று ஒருபுறமும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பூர்வகுடி மக்களின் மொழி, இன உரிமைகள் பாதிக்கப்படுவதாக இன்னொரு புறமும் எதிர்ப்பு வலுத்துள்ளது. அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, உ.பி, ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், கேரளாவில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று ஏற்கனவே முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். மேலும், ஆளும் இடதுசாரி முன்னணியும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணியும் இந்த சட்டத்தை எதிர்த்து வருகின்றன.
இதையடுத்து, இன்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் கலந்துகொண்டார். ஒரே பந்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்துவது ஆச்சரியமாக இருந்தது.

முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது, மதச்சார்பின்மையை காப்பதற்காக ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே குரலில் இன்று போராடுகிறோம். இது உலகிற்கு முன்மாதிரியாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில்தான் நம்மை மதரீதியாக பிரித்து சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்க முயன்றனர். நாம் அந்த சவால்களை எல்லாம் சந்தித்துதான் அரசியல்சட்டத்தை ஏற்படுத்தியுள்ளோம். அந்த அரசியல் சட்டத்திற்கு ஒரு பங்கம் வந்தால் அதை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. முஸ்லிம்கள், முஸ்லிம்கள் அல்லாதவர்கள் என்று பிரித்து முதல்முறையாக அரசாங்கமே ஒரு சட்டத்தை ெகாண்டு வந்திருக்கிறது. இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றார்.

You'r reading குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு.. கேரளாவில் ஒரே மேடையில் கம்யூ., காங்கிரஸ் கைகோர்ப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அசிஸ்டன்ட் டைரக்டர் ஆன பிரகாஷ்ராஜ்... பிரபல இயக்குனர் மெசேஜ்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்