குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் மனு.. நாளை விசாரணை

citizenship amendment act, Dmk filed case against citizenship act in supreme court,

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே போல், சுமார் 20 மனுக்கள் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறி, அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி, கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில், முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், டெல்லி, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மகுவா மோயித்ரா, கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சி உள்பட சுமார் 20 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது திமுக சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதிலும், குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மதரீதியாக நாட்டை பிளவுபடுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இம்மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி பாப்டே அமர்வு முன்பாக நாளை விசாரணைக்கு வரலாம் என தெரிகிறது.

You'r reading குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் மனு.. நாளை விசாரணை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சம் பேர் மனு தாக்கல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்