பாஜக கூட்டணி கட்சியில் துஷ்யந்துக்கு திடீர் எதிர்ப்பு ஹரியானா அரசியலில் பரபரப்பு

ஹரியானா ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள ஜன்னாயக் ஜந்தா கட்சியில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஹரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும், ஜன்னாயக் ஜந்தா கட்சி(ஜே.ஜே.பி) 10 இடங்களையும், லோக்தளம், எச்.எல்.பி ஆகியவை தலா ஒரு தொகுதியையும் கைப்பற்றின. இது தவிர 7 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். பாஜக ஆட்சியமைக்க மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்பட்டது.

இதையடுத்து, பாஜகவை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்த ஜே.ஜே.பி. கட்சியுடனேயே கூட்டணி சேர்ந்து பாஜக மீண்டும் ஆட்சியமைத்தது. கத்தார் மீண்டும் முதல்வராகவும், துணை முதல்வராக ஜே.ஜே.பி. கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவும் பொறுப்பேற்றனர்.

இந்த ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்களுக்குள் துஷ்யந்த் சவுதாலாவுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்கட்சியின் துணை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராம்குமார் கவுதம் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் கூறுகையில், துஷ்யந்த் சவுதாலா 11 துறைகளை தானே வைத்துள்ளார். இதைத் தவிர ஒரேயொரு ஜுனியருக்கு மட்டும் அமைச்சர் பதவி தந்துள்ளார்.

மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு எதுவும் செய்யவில்லை. யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை. தேர்தல் முடிந்து முடிவுகள் வரும் போது, எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் தெரியாமல் ஆம்பியன்ஸ் மால் வணிக வளாகத்தில் ரகசியமாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணி சேர்ந்துள்ளார் துஷ்யந்த். அவர் எங்களிடம் ஆலோசிக்கவே இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், அவர் தனது துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது ஹரியானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்குமார் கவுதமுடன் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் சென்றால், பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம்.

இந்நிலையில் துஷ்யந்த் சவுதாலா கூறுகையில், ராம்குமார் கவுதம் கட்சிப் பொறுப்பை உதறியது குறித்து எனக்கு தெரியவில்லை. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்துவேன் என்றார்.

You'r reading பாஜக கூட்டணி கட்சியில் துஷ்யந்துக்கு திடீர் எதிர்ப்பு ஹரியானா அரசியலில் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீனியர் நடிகருடன் ஜோடி போட ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகை ”மெட்ராஸ்” நாயகிக்கு அடிச்சது யோகம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்