டெல்லி பலாத்கார வழக்கின் தூக்குதண்டனை கைதி மனு..5 நீதிபதிகள் அமர்வு விசாரணை

Supreme Court to hear curative petition of death convict Akshay

டெல்லி பலாத்கார வழக்கில் தூக்குதண்டனை கைதி அக்சய் தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு துணை மருத்துவம் படித்து கொண்டிருந்த இளம் பெண்ணை ஓடும் பஸ்சில் 6 பேர் பலாத்காரம் செய்து தூக்கி வீசிவிட்டு சென்றனர். அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார். போலீசார் புலன்விசாரணை நடத்தி, பலாத்காரம் செய்த 6 பேரையும் கைது செய்தனர். அவா்களில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இன்னொருவன் சிறுவன் என்பதால் 3 ஆண்டு சிறார் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டான்.

அந்த பெண்ணின் அடையாளம் மறைக்கப்பட்டு, நிர்பயா என்று பெயரிடப்பட்டு, பலாத்கார வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் மற்ற குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சா்மா, அக்சய்குமார், பவன் குப்தா ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தன.

இதையடுத்து, குற்றவாளிகளுக்கு, ஜன. 22ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், குற்றவாளி முகேஷ், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினான்.
அந்த மனுவை ஜனாதிபதி நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்து முகேஷ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை அவசர வழக்காக எடுத்து நீதிபதி பானுமதி அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இதே வழக்கில் மற்றொரு தூக்குதண்டனை கைதி அக்சய் தனது மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க கோரி சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தான். இந்த மனு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று(ஜன.30) விசாரிக்கவுள்ளது.

You'r reading டெல்லி பலாத்கார வழக்கின் தூக்குதண்டனை கைதி மனு..5 நீதிபதிகள் அமர்வு விசாரணை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹன்சிகாவுக்காக நடிக்க வந்த சிம்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்