கிரிமினல்களுக்கு சீட்.. அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..

குற்றவழக்குகளில் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் அளித்தால், அதற்கான காரணம் குறித்து 48 மணி நேரத்திற்குள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குற்றவழக்குகளில் சிக்கியவர்கள் அந்த வழக்குகளில் இருந்து விடுதலையாகும் வரை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஒரு பொது நலன் மனுவை டெல்லி பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்திருந்தார். இவர் பாஜகவில் இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பொது நல வழக்குகளை தாக்கல் செய்து வருபவர்.

இந்த சூழலில், குற்றவழக்குகளில் சிக்கியவர்கள் அந்த வழக்குகளில் இருந்து விடுதலையாகும் வரை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க சட்டம் இயற்ற வேண்டுமென சுப்ரீம் கோர்ட் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேலும், குற்றவழக்குகளில் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் அந்த விவரங்களை தெரிவிக்க வேண்டுமென்று கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை அமல்படுத்தாததால், வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதிகள் ரோகிண்டன் நாரிமன், ரவீந்திர பட் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

குற்றவழக்குகளில் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரும் அரசியல் கட்சிகள், அந்த வேட்பாளர்களின் வழக்கு விவரங்களை தங்கள் கட்சி இணையதளத்தில் வெளியிட வேண்டும். மேலும், பத்திரிகைகளிலும் வெளியிட வேண்டும். வேட்பாளரை தேர்வு செய்த 48 மணி நேரத்திற்குள் இவற்றை வெளியிட வேண்டும். மேலும், வேட்பு மனு தாக்கல் செய்த 24 மணி நேரத்திற்குள், அந்த விவரங்களை வெளியிட்டது குறித்த அறிக்கையை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

You'r reading கிரிமினல்களுக்கு சீட்.. அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேதபாடசாலை நடத்த வீட்டை தானம் அளித்த எஸ்.பி.பி... மாடாதிபதியிடம் நேரில் வழங்கினார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்